பக்கம்:நாவுக்கரசர்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு 183.

உவமையாக எடுத்துக் காட்டிய அன்பின் திறம் நினைத்து மகிழ்ந்து போற்றத் தக்கதாகும். இறைவனை மனத்தின் கண் எண்ணி யான் உறங்கிய நிலையில் அவர் என்னைத் தேடி வந்ததைக் காட்டிலும் யான் ஞானப் பிள்ளையாரை நினையாது வந்த இந்நிலையிலே அன்புடைய நண்பராகிய அவர் என்னைத் தேடி வருகின்ற இச் செயலே பெரிதும் மதிக்கத் தக்கது’ என்று கூறுவார், வாய்மூரிறைவன் தம்மைத் தேடிவந்த முன்நிகழ்ச்சிக்குக் காழிப் பிள்ளையார் தம்மைத் தேடி வருதலாகிய பின் நிகழ்ச்சியை உவமை யாகக் கூறிப் போற்றுகின்றார். எத்தகைய பெரியோர்க்கும் இறைவனின் திருக்குறிப்பு எளிதில் உணரத்தக்க தன்று எனத் தம் நெஞ்சிற்கு அறிவுறுத்தும் பாங்கில், ஞானசம்பந் தர்க்கு வீழிமிழலைப் பெருமான் வட்டங் கொடுத்து மாற்ற வேண்டிய பழங் காசினை முதலில் தந்து, பின் அவர் ‘வாசிதீரவே காசு நல்குவீர் என வேண்டிப் பாட வட்டந் தீர்த்தருளிய நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றார். காழிப்பிள்ளையார் நாவுக்கரசர்பாற் கொண்ட நட்பின் பெருமையும் அப்பர் ஞானப் பிள்ளையார்பால் வைத்த பேரார்வமும் மேற்காட்டிய திருக்குறுந்தொகையால் நன்கு புலனாதல் கண்டு மகிழலாம்.

இங்ஙனம் சிவபெருமான் நாவுக்கரசரை திருவாய் மூருக்கு வருக என அழைத்து வந்து இடைவழியில் மறைந்து பின் ஞான சம்பந்தர் நாவுக்கரசர் ஆகிய இரு வருக்கும் ஆடல் காட்டி அருள் புரிதற்குக் காரணம் என்ன? நாவுக்கரசர் மனக் கவலையுடன் திருமடத்தின் ஒருபால் அஞ்சித் துயில் கொண்டமையே. தாம் பத்துப் பாடல்கள் பாங்குறப் பாடுமளவும் மறைக்கதவம் திறக்கத் தாழ்த்த அருமையையும், காழிப் பிள்ளையார் முதற் பாடலைப் பாடிய அளவில் மறைக்கதவம் அடைக்கப் பெற்ற எளிமை யையும் எண்ணி, இறைவனது திருக்குறிப்பறியாது நாம் மறைக்கதவம் திறக்கப் பாடியது தவறு’ என அப்பர் பெருமான் கருதினமையே. அவர் கொண்ட மனக் கவலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/224&oldid=634224" இலிருந்து மீள்விக்கப்பட்டது