பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

————————————————————————

மேற்கே கூட்ஸ் ஷெட்டிலிருந்து வந்து கொண்டிருந்த மருந்துக்கடைப் பார்சல் அடங்கிய கைவண்டி ஒன்றும், கிழக்கேயிருந்து வந்து கொண்டிருந்த போலிஸ் லாரி ஒன்றும், தெற்கே பாங்கியிலிருந்து வந்து கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷாவும், வடக்கே தபாலாபீஸிலிருந்து வந்து கொண்டிருந்த தந்திப் பியூன் சைக்கிளும், நேற்று காலை பத்தேகால் மணி சுமாருக்கு ஒரே சமயத்தில் மோதிக் கொண்டன. இந்த மோதலின் நடுவே கான்வென்ட் பள்ளியிலிருந்து வந்து கொண்டிருந்த ஆங்கிலோ இந்திய யுவதி ஒருவரும் அகப்பட்டுக் கொண்டார். விபத்து நடந்தபோது மழை பலமாகப் பெய்துகொண்டிருந்தது. பாங்கிலிருந்து வந்த கறுப்புக் கண்ணாடிக்காரர், தபாலாபீஸிலிருந்து வந்த தந்தி பியூன், கைவண்டி இழுத்து வந்த கூலி, கான்வென்ட் ஸ்கூலிலிருந்து வந்த யுவதி ஆகிய நால்வருக்கும் சிறுசிறு காயங்கள் பட்டிருப்பதனால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆஸ்பத்திரியில் அவர்களுக்குச் சிகிச்சை முடிந்ததும் போலீஸார் அவர்களைப் புலன் விசாரித்ததில் விபத்தின் காரணமாக அற்புதமான சில உண்மைகள் வெளிப்பட்டன.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே முறையே பாங்கு, போஸ்டாபீஸ், கான்வென்ட் ஸ்கூல்,ரயில்வே கூட்ஸ்ஷெட் ஆகிய நான்கு இடங்களிலிருந்தும் நான்கு ரிப்போர்ட்டுகள் போலீஸுக்கு வந்த சேர்ந்தன. எல்லா ரிப்போர்டுகளிலுமே நேரம் பத்தேகால் மணி என்று குறித்திருந்தது.

கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர் பத்தாயிரம் ரூபாய்க்குக் கள்ள நோட்டுக்களைக் கொடுத்துவிட்டு நல்ல நோட்டுக்களை மாற்றிக் கொண்டு போய்விட்டதாக பாங்கியிலிருந்தும், ஒரு கேடி தந்திப் பியூனின் உடையில் வந்து மணியார்டர் பாரங்களையும் பணத்தையும் திருடிக் கொண்டு தப்பிவிட்டதாக தபாலாபீளியிலிருந்தும், ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்மணி போல் வந்து ஜில்லா கல்வி அதிகாரியின் அந்தரங்கக் காரியதரிசி என்று சொல்லிப் பள்ளிக்கூடத்துப் பைல்களைக் கடத்திக் கொண்டு போய்விட்டதாகக் கான்வென்ட் ஸ்கூலிலிருந்தும், மருந்துக் கடைக்காக வந்த பார்சலில் சாராயப் புட்டிகள் இருக்கலாமென்று சந்தேகிப்பதாக ரயில்வே கூட்ஸ் ஷெட்டிலிருந்து - ரிப்போர்ட்டுகள் வந்திருந்தன. போலீஸார் நான்கு பேர்களையும் கைது செய்தனர். இந்த அதிசய விபத்தில் உயிர்ச் சேதமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.”

பத்திரிகை படிப்பதாகத் தெரியவில்லை. சுவாரஸ்யமாகக் கனவு காண்பது போலிருந்தது. அன்று அந்த நட்ட நடுத்தெருவில் நாற்பது நிமிஷத்துக்குள் லாரியும், வண்டியும் சைக்கிளும், ஆட்டோ ரிக்ஷாவும் மட்டுமா மோதிக் கொண்டன? நான்கு திருடர்களின் அதிர்ஷ்டமும் மோதிச் சிதறித் தூள் தூளாகிவிட்டது. நான்கு நேர்மையற்ற எண்ணங்கள் பாழ்பட்டு விட்டன.

அதிசயமான நிகழ்ச்சிகளெல்லாம் கதையில்தான் வர வேண்டுமா? கற்பனையில்தான் திகழ வேண்டுமா? வாழ்க்கையில் வரக்கூடாதா என்ன?

(கல்கி, 2.6.1957)