பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14. சந்திப்பு

1. காட்சி

“பாலு! அதோ அந்த ஏரியிலே படகு ஏறிப் போவோமா?”

“பயமா இருக்குமே, அப்பா!...”

“போடா பயந்தாங்கொள்ளி. நான் கூட வருகிற போது உனக்கென்னடா பயம்?”

“சரி அப்பா, போகலாம்!” - கொடைக்கானலின் குளிரில் மிரண்டு என் அருகில் ஒட்டிக் கொண்டு நின்ற பையன் சம்மதத்துக்கு அறிகுறியாய்த் தலையை ஆட்டினான். முழுக்கை கம்பளிச் சட்டையும், கனமான நிஜாரும், மப்ளருமாகச் சேர்ந்துகொண்டு, ஐந்து வயதுப் பையனைப் பெரியவனாகக் காட்டின.

“வா பாலு! போகலாம்!” பையனைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு ஏரியை நோக்கிக் கிளம்பினேன்.

"அப்போவ்.”

“என்னடா? என்ன வேணும்?”

“ஏரி ரொம்ப ஆழமா இருக்குமோ?”

மலர்ந்த விழிகள் இரண்டும் விரிய என்னை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே கேட்டான் பாலு. அந்தக் கண்களையும் அவன் முகத்தையும் பார்க்கிற போது ‘அவள்’ நினைவு வந்தது. பாவி! எப்படித்தான் இந்தக் குழந்தையை விட்டுச் சாக மனம் வந்ததோ? மூன்றரை வருஷ வாழ்க்கை. எனக்குப் பாரமாக இந்தப் பையனை விட்டு விட்டுப் போய்ச் சேர்ந்தாள். வேண்டுமென்றா போனாள்? மரணத்தை வெல்ல நாம் யார்? பையனை மட்டுமா? என் சரோஜா என்னையும் அனாதையாக்கி விட்டுப் போய் விட்டாள்.

பாலு தாயில்லாத குழந்தை. நான் மனைவியை இழந்த வாலிப வயதுத் தந்தை. அவனுக்குத் தாயுறவு இல்லை. எனக்கு மனைவி உறவு இல்லை. இருவரும் இரு வேறு விதத்தில் நிராதரவானவர்கள்.

“என்னப்பா? நீ பதில் சொல்ல மாட்டாயா? உனக்கு என் மேலே கோபமா?”

“என்னடா? ஏரி ஆழமான்னு கேட்டாயா?ஆழமானால் நமக்கென்னடா கண்ணு? படகிலேதானே போகப் போகிறோம்? ஒரு பயமும் இல்லை” நான் சிந்தனையிலிருந்து விடுபட்டு அவன் கேள்விக்குப் பதில் கூறினேன். அவன் பேசாமல் நடந்து வந்தான். தூரத்திலிருந்து பார்க்கும் போதே ஏரியில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாடகைப் படகு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற சந்தேகத்தோடு காலை எட்டிப் போட்டுத் துரிதமாக நடந்தேன் நான்.