பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

————————————————————————

"அப்பாவ்...?"

"ஒ! என்னடா மறுபடியும்? தொன தொணவென்று..."

"இல்லேப்பா? இப்போது அம்மா உசிரோடு இருந்தால் நம்மோடு கொடைக்கானலுக்கு வந்திருப்பாள் இல்லையா அப்பா?”

"நீ பேசாமல் வரமாட்டாய்?"- அவன் கேள்வி புண்ணைக் கிளறிவிட்டது. வாயை அடக்குவதற்காக இப்படிச் சத்தம் போட்டேன். என் சத்தத்தைக் கேட்டுப் பையன் 'கப்சிப்' என்று அடங்கிவிட்டான்.

படகுகள் புறப்படும் இடத்தில் ஒரே ஒரு படகு யாரும் வாடகைக்குப் பேசாமல் மீதமிருந்தது.அதற்கான வாடகையைக் கொடுத்துவிட்டுப் பையனை ஏற்றிக்கொண்டு புறப்பட்டேன். சுற்றிலும் அடர்த்தியான மலைக்காட்சிகளுக்கு நடுவே நீல நிற வெல்வெட்டை அளவு கத்தரித்துத் தைத்தாற்போன்ற அந்த ஏரியில் படகில் செல்வது எவ்வளவு பெரிய இன்பம்! சிறிதும் பெரிதுமாக இன்னும் எத்தனையோ படகுகள் ஏரியில் சென்று கொண்டிருந்தன.

"அப்பா! அப்பா! அதோ, அங்கே பாரேன்!” பையன் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தேன். இருபது இருபத்துமூன்று வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி படகைச் செலுத்திக் கொண்டிருந்தாள். படகில் அவளோடு பாலுவின் வயதையொத்த சிறு பெண் ஒருத்தியும் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

“அந்த மாமி படகை என்ன வேகமாகச் செலுத்தறா பாரு அப்பா!"-பையனுக்குக் குதுரகலம் கிளம்பிவிட்டது.

"அதுக்கென்னடா! நீ பயப்படாமல் இருந்தால் நானும் வேகமாக விடுவேன்."- என் பதிலை அவன் கவனிக்கவில்லை.அந்தப்படகையும் அதிலிருந்து சிறு பெண்ணையுமே பார்த்துக் கொண்டிருந்தான். என் கவனமும் அந்தப் படகின்மேல் சென்றது. அதைச் செலுத்திக் கொண்டிருந்தவளைக் கவனித்தேன் நான். ஆசையால் உந்தப்பட்டுப் பார்த்த பார்வை அல்ல அது ஏதோ தற்செயலாகச் சென்று லயித்த பார்வைதான்.

'இந்தப் புத்தகத்தில் நாம் படிப்பதற்கு என்ன இருக்கப் போகிறது?' என்ற அலட்சியத்தோடு பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும்போது நமக்குப் பிடித்தமான ஒன்று அதில் அகப்பட்டுவிட்டால் எப்படியிருக்கும்? அந்த நிலைதான் தற்செயலாகச் சென்ற என் பார்வைக்கும் ஏற்பட்டது.

என் கண்கள் சென்ற திசையிலேயே நிலைத்தன. அப்படி ஒன்றும் அவள் பிரமாதமாக அலங்கரித்துக் கொண்டிருக்கவில்லை. வாயில் புடவையும் கறுப்பு நிறச் சோளியும் அணிந்து கொண்டிருந்தாள். செல்வக் குடும்பத்துக்கே உரிய கம்பீரமான அழகு.அவள் முகத்தில் படிந்திருந்ததும் வெளிறிய சிவப்புநிறம்- யானைத்தந்தத்தைப் போல, நியாயமாகப் பார்த்தால் அவளுக்கு இருந்த அழகுக்கு இன்னும், எவ்வளவோ அலங்காரம் செய்து கொண்டிருக்கலாம். அதிகம் ஆடம்பரத்தை விரும்பாதவள் போலிருக்கிறது! என்ன எளிமை எவ்வளவு அழகு!