பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

————————————————————————

கொடைக்கானல் ‘சீஸனை’ அனுபவிக்க வந்திருக்கிறாளே, அவளுக்கு என்ன துணிச்சல்?’ - என் மனத்தில் இப்படி ஒரு கேள்வி.

‘அதனாலென்ன? இந்தக் காலத்தில் படித்த பெண்கள் தனியாகப் பிரயாணம் செய்வதுதான் சகஜமாகிவிட்டதே? காலேஜில் படிக்கிற பெண் போலும்; வீட்டில் யாரும் துணைக்கு வரக்கூடிய நிலையில் இருந்திருக்க மாட்டார்கள். தங்கையையும் அழைத்துக்கொண்டு தனியாகக் கிளம்பியிருப்பாள். இதில் என்ன தப்பு?’ இப்படி ஒரு அனுமானம்.

‘படித்து விட்டால்தான் என்ன? நெற்றிக்குப் பொட்டு வைத்துக் கொள்வது அநாகரிகமா? கைக்கு வளை போட்டுக் கொள்வது அநாகரிகமா? சே! சே! என்ன படிப்பு வேண்டியிருக்கிறது? நாலெழுத்துப் படித்துவிட்டால் மங்கலமான பழக்கவழக்கங்களையெல்லாம் தலைமுழுகி விடுகிறார்களே.’

ஆனாலும் துணிச்சல்காரப் பெண் படகை என்ன லாகவமாகத் தள்ளுகிறாள்? தண்ணிரைக் கண்டால் மிரண்டு நடுங்குகிற ஆளாகத் தெரியவில்லை.

துரக்கக்கலக்கத்தில் புரண்டு படுத்த பாலு தன் பிஞ்சுக் காலால் இடுப்பில் உதைத்தான்.போர்வையை இழுத்து அவனுக்கும் எனக்குமாகச் சேர்த்துப் போர்த்திக் கொண்டேன். எனக்கும் தூக்கம் இமைகளை அழுத்தியது. சிந்தனைகளால் எவ்வளவு நேரம்தான் துக்கத்தை எதிர்க்க முடியும்?

இரண்டையுமே நான் எதிர்க்கவில்லை. தூக்கத்தையும், அனுமதித்து விட்டேன். சிந்தனையையும் அனுமதித்துவிட்டேன். நினைவு தூக்கத்தில் இரண்டறக் கலந்து போய்விட்டது!

3. கனவு

நினைவோடு கூடிய எண்ணத்துக்குச் ‘சிந்தனை’ என்று பெயர். தூக்கத்தில் ஏற்படும் பிரக்ஞையற்ற எண்ணத்துக்கும் பெயர் உண்டா? உண்டானால் ‘கனவு’ என்பதுதான் அந்தப் பெயர்.

மாலைநேரம். கொடைக்கானல் மலை அழகின் சுவர்க்கமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.அங்கங்கே ஹோட்டல்களிலிருந்தும், பங்களாக்களிலிருந்தும், பல நிறப் பட்டுப் பூச்சிகளைப்போல ஆண்களும் பெண்களுமாக ஏரியில் படகு செலுத்தவும், மலைக்காற்றில் உலாவவும், சினிமா பார்க்கவும் சென்று கொண்டிருந்தனர். பாலுவை அழைத்துக்கொண்டு ஏரிக்கரைக்குப்போகிறேன்.அதே சமயத்தில் அந்த அழகியும் தன் தங்கையை அழைத்துக்கொண்டு வருகிறாள். அதே வெள்ளை கலையுடுத்த கோலம். பாலுவும் சிறுமியும் வெகுநாள் பழகியவர்களைப்போலக் கை கோர்த்துக்கொண்டு நடந்து வருகின்றனர்.

ஆனால் நாங்கள் அப்படிக் கை கோர்த்துக் கொண்டு சிரித்துப் பேசி நடக்க முடியுமா? அவள் யாரோ? நான் யாரோ? ஆசை இருக்கலாம்; அப்படிச் செய்ய