பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————————————முதல் தொகுதி / சந்திப்பு * 111

வேண்டுமென்று. யாருக்கு? எனக்குத்தான். அவளுக்கும்தான். ஏன் இருவருக்குமே இருக்கலாம்! எல்லா ஆசைகளையுமே வெளிப்படையாக நிறைவேற்றிக் கொண்டுவிட முடியுமா? பச்சைக் கற்பூரத்தைப் பேழைக்குள் பொதிந்து வைத்திருந்தால் தானே வாசனை நிலைத்திருக்கிறது? சில ஆசைகளையும் அதுபோல் அடக்குவது அவசியமாகிறது.

நானும் அவளும் சாதாரணமாகச் சம்பாஷித்துக்கொண்டு நடந்தோம். இடையிடையே அவசியமான சமயங்களில் அவளுடைய முத்துப் பல் வரிசை பவழச் சிறையிலிருந்து மெல்லத் தோன்றி மறையும். அதாவது அவள் சிரிப்பாள்.

“உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறீர்கள். இந்த வருஷம் கொடைக்கானல் சீஸனுக்கு வந்ததில் உங்கள் பழக்கத்தை என்றென்றும் மறக்கமாட்டேன்.” அவள் புன்னகையோடு என்னைப் பார்த்துக் கொண்டே இவ்வாறு கூறுகிறாள்.

“எனக்கும் அப்படித்தான்” என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறேன் நான்.

“நாமிருவரும் ஜோடியாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால் என்ன?” எனக்குத் துாக்கிவாரிப் போடுகிறது. ஆனாலும் மகிழ்ச்சி. யாராவது கரும்பு தின்னக் கூலி கேட்பார்களா? மகிழ்வால் பொங்கும் என் மனத்தைச் சமாளித்துக் கொண்டே, “அதற்கென்ன? எடுத்துக்கொண்டால் போயிற்று! பாலுவையும் உன் தங்கையையும் கூட உட்கார்த்தி எடுத்துக்கொள்வோம்!” என்கிறேன்.

"ஊஹாம், கூடாது. நாம் இருவரும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.”

“சரி!... அப்படியே செய்யலாம்!” இருவரும் ஒரு ஸ்டுடியோவுக்குச் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு அதன் பிறகு ஏரிக்குச் சென்றோம்.

“இன்றைக்கு நாம் ஒரே படகில் செல்வோம். தனித்தனிப் படகுகள் வேண்டாம்.” அவள் கெஞ்சினாள்.

“இல்லை! பார்க்கிறவர்களுக்கு நன்றாக இருக்காது. யாராவது ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வார்கள்.”

“நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. உங்கள் வாழ்க்கைப் படகிலேயே அருகில் அமர்ந்து ஒட்டத் தீர்மானித்துவிட்டவளுக்கு இந்த வெறும் படகில் உட்காரத் தயக்கமா?”

“என்னது? இப்போது நீபேசுவது மெய்தானா? என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லையே?”

“நம்புங்கள். சத்தியமாக நம்புங்கள்.நான் உங்களிடம் என்னை ஒப்படைக்கத்தான் போகிறேன்...”

"ஆனால் அது என் தவப் பயன்.."

“வாருங்கள், ஒரே படகில் போகலாம்..”