பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

————————————————————————

“குழந்தைகள்?”

“அவர்கள் வேண்டாம் கரையிலேயே இருக்கட்டும்”

“ஏன், கூட வரட்டுமே! படகில் இடத்துக்குப் பஞ்சமா? தவிர, கரையில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது யார்...?”

“உஷ்! அதோ பாருங்கள்! அவர்களைப் போல நாமும் போக வேண்டும்.”

அவள் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தேன். ஒரு சிறு படகில் கணவனும் மனைவியும்போலக் காணப்பட்ட ஒரு யுவனும், யுவதியும் நெருங்கி உட்கார்ந்து கொண்டிருந்தனர்.என் உடலில் பாதாதிகேசபரியந்தம் மயிர் சிலிர்த்தது.அவள் ஆவல் ததும்பும் கண்களால் இமைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அந்தப் பார்வை என்னை வென்றுவிட்டது. “சரி உன் இஷ்டம்..”

குழந்தைகள் இருவரையும் படகு கிளம்பும் இடத்திலிருந்த ஆளிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

“அப்பா! அப்பா என்னை மட்டும் விட்டுட்டுப் போறியே, உனக்குப் பாவம்!” பாலு மழலைக் குரலில் கூப்பாடு போடுகிறான். அந்தச் சிறுமியும் அவனோடு சேர்ந்து கொண்டு கூப்பாடு போடுகிறாள். நாங்கள் அந்தக் கூப்பாட்டைக் காதில் கேட்காதவர்களைப்போலப் படகைச் செலுத்துகிறோம்.

“எவ்வளவு மனோரம்மியமான நேரம் இது?” என்று கூறிக் கொண்டே என் தோள்பட்டையில் தலையைச் சாய்க்கிறாள் அவள். கூந்தல் என் கன்னத்தில் உரசுகிறது.

“அன்பே இவை மறக்க முடியாத நிமிஷங்கள்..” நான் அவள் தலையைக் கோதிக் கொண்டே இவ்வாறு சொல்கிறேன்.

“இந்த நிமிஷங்கள் இப்படியே ஊழி ஊழியாக நிலைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?”- அவள்.

தோள்பட்டையில் ஏதோ உறுத்துகிற மாதிரி உணர்ந்து கண் விழித்தேன். விழித்தால். அடாடா அதுவரை நிகழ்ந்ததெல்லாம் வெறும் கனவு தூக்கத்தில் குழந்தை பாலு தன் காலைத் தூக்கி என் தோள்பட்டைமேல் போட்டிருந்தான்.ஆகா! எத்தகைய இன்பமயமான கனவு?

4. உண்மை

மறுநாள் மாலை பாலுவை அழைத்துக்கொண்டு ஏரிக்கரைக்குப் போனேன். சொல்லி வைத்தாற்போல் அந்த வெள்ளைக் கலையுடுத்த மோகினியாளும் தங்கையை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். முதல் நாளிரவு கனவில் தோன்றி படாதபாடு படுத்திய அந்த அழகி இப்போது நான் நின்றுகொண்டிருந்த பக்கம் சாதாரணமாகத் திரும்பிப் பார்த்தாள். அவளோடிருந்த சிறுமி பாலுவைத் திரும்பிப் பார்த்தாள். பாலுவும் அவளைப் பார்த்தான்.