பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————முதல் தொகுதி / சந்திப்பு * 113

இருவருடைய கைகளிலும் ‘சாக்லேட்’ சுற்றிய வர்ணக் காகிதங்கள் இருந்தன. காகிதங்களைக் கப்பல்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பெரியவர்களுக்குத்தான் பழகுவதற்குக் கூச்சம், சங்கோஜம் இவையெல்லாம் தடையாகக் குறுக்கிட்டுத் தொலைக்கின்றன. சிறுவர்கள் இதையெல்லாம் பார்ப்பதில்லை. ஒருவருக்கொருவர் அருகில் நெருங்கிக் கப்பல்களை உருவாக்கும் வேலையை ஆரம்பித்தனர்.

இதற்குள் படகுகள் வந்துவிட்டன! நான் படகைப் பேசி வாடகை கொடுத்துவிட்டுப் பாலுவை அழைத்துக்கொண்டு புறப்பட்டேன். அவள் மற்றோர் படகில் தங்கையை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.இரண்டு படகுகளும் அதிகம் விலகாமல் நெருக்கமாகவே சென்றுகொண்டிருந்தன.

“உன் கப்பலைத் தண்ணீரிலே விடு. என் கப்பலையும் விடுகிறேன்!” அந்தச் சிறுமி பாலுவைக் கூப்பிட்டாள்.

“சரி! இந்தா விட்டுவிட்டேன், நீயும் விடு” பாலு தன் காகிதக் கப்பலை என் படகுக்கு அருகில் தண்ணீரின் மேல் மிதக்கவிட்டான்.

“இதோ நானும் விட்டுவிட்டேன்!” அந்தப் பெண்ணும் தன் படகோரமாகக் காகிதக் கப்பலை மிதக்கவிட்டாள்.

இரண்டு கப்பல்களும் நேர் எதிரெதிர்த் திசையில் நகர்ந்தன.

குழந்தைகளின் இந்த வேடிக்கையைப் பார்த்து அவள் என்னை நோக்கி முறுவல் பூத்தாள். நானும் பதிலுக்குப் புன் முறுவல் செய்தேன்.வேறு பேச்சில்லை. குழந்தைகள் காகிதக் கப்பல் விளையாட்டில் நெருக்கமாக ஈடுபட்டிருந்ததால் அவளோ, நானோ படகுகளை வேறு திசையில் விலக்கிச் செல்ல முடியவில்லை. நாங்கள் மட்டும் ஜடங்களா? அருகருகே எவ்வளவு நேரம்தான் பேசாமல் வெறுமனே சிரித்துக் கொண்டு மட்டும் இருக்க முடியும்? அவள்தான் முதலில் பேச்சைத் தொடங்கினாள். “சார் பையன் உங்கள் தம்பியா? ரொம்ப ‘பிரிஸ்கா’ இருக்கிறானே?”

“இல்லை! என் பையன் - தாயில்லாக் குழந்தை!” மென்று விழுங்கிக்கொண்டே பதில் சொல்லிவிட்டு, அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன்.

அப்பப்பா! அந்த முகத்தில் எவ்வளவு ஏமாற்றம்? கண்கள் ஏன் அப்படி விரிகின்றன? துடுப்பைத் தள்ளிக் கொண்டிருந்த கை இயக்கமற்று நின்றுவிட்டதே! பாலுவுக்கு நான் தகப்பன் என்று அறிந்தபோது அவளுக்கு ஏன் இவ்வளவு ஆச்சரியமும் ஏமாற்றமும் உண்டாகின்றன?

“இந்தச் சிறுமி உங்கள் தங்கையோ?” என்று நான் கேட்டேன். சட்டென்று அவள் முகபாவம் மாறியது. கன்னங்கள் சிவந்தன.தலை கீழ் நோக்கியது. அவள் கூறிய பதில்:

“இல்லை என் பெண். தகப்பனில்லாக் குழந்தை” என் தலைமேல் வானம் இடிந்து விழுந்ததுபோல் இருந்தது எனக்கு. அதிர்ச்சியில் துடுப்பைத் தண்ணீருக்குள்ளே நழுவ விட்டுவிட்டேன். இரு படகுகளும் ஸ்தம்பித்து நின்றன. நின்ற வேகத்தில் என்

நா.பா. I - 8