பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

————————————————————————

படகடியிலிருந்து ஒரு அலை கிளம்பியது. அலைகளின் கூம்பில் பாலுவும் சிறுமியும் மிதக்கவிட்ட காகிதக் கப்பல்கள் மேலெழும்பி மிதந்தன. அலையும் அலையும் சந்தித்தபோது இரு அலைகளுமே வலுவிழந்து பின்னோக்கித் திரும்பின. காகிதக் கப்பல்கள் இரண்டும் மூழ்கிவிட்டன.

“ஐயோ! அப்பா, கப்பல் போச்சு! முழுகிப் போச்சு!” என் பையன் கூச்சல் போட்டான்.

“ஐயோ! அம்மா, கப்பல் உள்ளே முழுகிடிச்சு!” அந்தச் சிறுமி அவள் தாயை நோக்கிக் கூப்பாடு போட்டாள்.

திடீரென்று அவள் படகை வேறு திசையில் திருப்பினாள். நானும் நீரில் மிதந்த துடுப்பை எடுத்து என் படகை எதிர்த் திசையில் வேகமாகத் திருப்பினேன்.

இந்தத் திடீர்ப் பிரிவின் காரணம் புரியாமல் பாலு என்னையும், சிறுமி அவள் தாயையும் மிரள மிரளப் பார்த்தனர்.

படகுகள் எதிரெதிர்க் கோணத்தில் வெகுதூரம் சென்றுவிட்டன. இடையே பெரிய நீர்ப்பரப்பு.

என் இதயத்தை அமுக்கிக் கொண்டிருந்த நீண்ட பெருமூச்சு வெளியேறிக் காற்றோடு கலந்துவிட்டது.

‘ஏ! பாழாய்போன உண்மையே! காட்சியையும், அனுமானத்தையும், கனவுகளையும்விட நீ ஏன் இவ்வளவு கசப்பாக இருக்கிறாய்?’

‘எங்கும் என்றும் எந்த யுகத்திலும் நீ இப்படித்தான் மனித சமூகத்தின் கசப்பு மருந்தாக இருந்து, பெருமூச்சுக்களையும், நிராசைகளையும் ஏக்கங்களையும், ஏமாற்றங்களையும் உற்பத்தி செய்து வருகிறாய்!’

‘செய்! செய்! உன்னால் முடிந்தவரையில் செய்து கொண்டிரு!’

(கல்கி, 16.6.1957)