பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர்த்துடிப்புள்ள சிந்தனைகள் இக்கதைகளை நீங்கள் படித்து முடிப்பதோடு முடிந்து விடுபவை அல்ல. பல சிந்தனைகள் இவற்றை நீங்கள் படித்து முடிக்கும் போதுதான் ஆரம்பமாகவே செய்யும். சிந்தனைகளை முடித்துக் கணக்குத் தீர்த்து முற்றுப் புள்ளி வைத்துவிடாத இக்கதைகள் உங்களையும் தொடர்ந்து சிந்திக்க வைக்கும் உங்களிடம். இவை பற்றிக் கேள்விப்படுகிறவர்களையும் அவை சிந்திக்க வைக்க வேண்டும். அதுவே இதை எழுதியவனுடைய ஆசை, நோக்கம் எல்லாம் ஆகும்.

எனது இந்தச் சிறுகதைகள் வாழ்க்கை அநுபவங்களின் சாயல்கள் உள்ள கற்பனைக் கதைகள். சில முழுவதும் கற்பனையாகவே உருவாக்கப்பட்ட கதைகள். பல பிரச்னைகளைத் தழுவிய கற்பனைகள் இவை. பயண அநுபவத்தை இணைத்து உருவாக்கிய கற்பனையே ‘சந்தேகங்களின் முடிவில்!” வெளிநாடுகளில் புதிய சூழலில் வளரும் பேரனைக் கீழ்நாட்டுத் தாத்தா ஒருவர் பார்க்க நேரும்போது ஏற்படும் சிக்கலே அமெரிக்காவிலிருந்து பேரன் வருகிறான் சிறுகதை. நாட்டு நடப்பும் அரசியல் லஞ்ச ஊழலுமே 'களவும் கற்று கதைக்கு ஆதார சுருதியாகக் கிடைத்தவை. சினிமா, பொதுவாழ்வு, செமினார் என்ற பெயரில் நடக்கும் ஹம்பக்குகள் ஒருமைப்பாடு விவகாரம், முதலிய பலவற்றைத் தழுவி நடக்கும் கதைகள் இத்தொகுதியில் உள்ளன.

சிறுகதைகளில் கதாசிரியனின் அனுபவச் செல்வமும், அவற்றை அவன் விவரிக்கும் திறமும் நயமுமே முக்கியம். அந்தச் சுகானுபவம்தான் அவனுக்கும் அவன் வாசகர்களுக்குமிடையே உள்ள இலக்கிய உறவு. அவ்வுறவு இத்தொகுதி மூலம் செழிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இதை வாசகர்கள் முன் வைப்பதில் மகிழ்கிறேன்.