பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 ★நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



மனோபாவம் நம் நாட்டில் மத்தியதரக் குடும்பங்களில் இன்னும் பரவவே இல்லை. பெரும்பாலோருக்கு அழகுணர்ச்சி இல்லாமல் இருப்பதற்கும், நோய்களின் பெருக்கத்திற்கும் இதுதான் காரணம்”

சிவசிதம்பரம் முன்போலவே சிரித்தார். “அது சரி! அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று உங்களக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.

"ஏன்? ஒன்றாக ஒரே படகில் போவதைப் பார்த்தாலே தெரியவில்லையா?”

“ஒகோ” அவர் முறுவல் பூத்தார்.

“போம் ஐயா! போலீஸ் மனத்தோடு, போலீஸ் கண்களால் பார்த்தால் உலகமே அயோக்யத்தனமாகத்தான் தெரியும்” என் கோபத்தை அவரைத் தாக்கிப் பேசித் தீர்த்துக் கொண்டேன்.

அவர் சிரித்துக் கொண்டே பேசாமல் இருந்துவிட்டார்.

“பாரும் ஐயா! நன்றாகக் கண்களைத் திறந்து பாரும். அந்தப் பெண்களை உட்கார்த்தி அந்த மனிதன் சிரமப்பட்டுப் படகை செலுத்துகிறான். சரளமாகப் பேசிக்கொண்டு போகிறான். ஒரே குடும்பமென்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?”

“நண்பரே! பதினைந்து ஆண்டுகளாக இந்தக் காக்கி உடுப்புகளில் புகுந்து கொண்டு உலகத்தைப் பார்த்து வருகிறவன் நான். என் கண் பார்வைக்குப் படுகிற மாதிரி உங்கள் பார்வையில் எதுவும் பட முடியாது”

“அதெப்படி முடியும்? உங்கள் கண் பார்வைக்கு எதுவுமே நியாயமாகப் பட முடியாதே!” நான் குதர்க்கம் பேசினேன்.

“சரி! இப்போது நமக்கெதற்கு இந்த வீண் விவாதம்? நாம் மேற்கொண்டு சுற்றிப் பார்க்கப் போகலாம். வாருங்கள்” என்று கூறி, என்னை அங்கிருந்து அழைத்துக் கொண்டு புறப்பட்டார் இன்ஸ்பெக்டர்.

மூணாறு டாப் ஸ்டேஷன் ரோட்டில் திரும்பி ‘பில்லர் ராக்ஸ்' போகிற வழியில் ஜீப் சென்றது. வானிலை ஆராய்ச்சி நிலையம், பெய்ரி ஃபால்ஸ், கால்ஃப் லிங்க்ஸ் - எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்தோம்.மனித நடமாட்டமே இல்லாத மலைப்பகுதிகள் அத்தனையும், எனக்கு நிம்மதியாக இருந்தது.

மணி ஐந்தரைக்கு மேலானதும் இருட்டியதுபோல் மூடுபனி வந்து கவிந்து கொண்டது.

"இன்றைக்குப் போதும்! மற்ற இடங்கள் நகரிலிருந்து சில மைல் தள்ளிச் சுற்றுப்புறத்தில் இருக்கின்றன. நாளைக்குக் காலையில் மறுபடியும் புறப்படுவோம்" என்று கூறினார் சிவசிதம்பரம். திரும்பிவிட்டோம்.

கடுங்குளிரோடு மூடுபனியின் மங்கலில் ஒளி மங்கிய மின்சார விளக்குகள் அங்கங்கே மின்னின.அப்போது அந்த அந்திநேரத்தில் கோடைக்கானல் பூப்பு நீராடி