பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16. தெருவோடு போனவன்

கையில் மணிக்கட்டின் மேல் கடிகாரம் ஒடிக் கொண்டிருந்தது. அப்படித்தான் வாழ்க்கையும் தெருவில் யாரோ சாவி கொடுத்து முடுக்கிய மாதிரி ஒடிக் கொண்டிருந்தது. நவராத்திரிக் கொலுவுக்கு வீட்டுக்கு வீடு போகும் பெண்கள், பட்டுப் பூச்சிகள் மாதிரித் தெருவில் அங்கும் இங்கும் போய் வந்து கொண்டிருந்தனர். பூக்காரப் பெண்கள், ரிக்‌ஷா வண்டிகள், கார்கள், பாதசாரிகள், தெரு அதிர ஒடும் லாரிகள் எல்லாம் கண்களுக்கு முன் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தன.

“மாமீ! மாமீ! கதவைத் திறங்க மாமீ...!” அப்போதுதான் செடியிலிருந்து கொய்து கொண்டு வந்த ரோஜா மலர் போல, ஆறு வயதுச் சிறுமி ஒருத்தி கையில் குங்குமச் சிமிழோடு கதவைத் தட்டினாள்.

தோளிலிருந்து நழுவிய வெள்ளைப் புடவையை நேர் செய்து கொண்டு, ஜன்னலோரத்திலிருந்து எழுந்து போய்க் கதவைத் திறந்தேன்.

“குங்குமம் எடுத்துக்குங்க மாமீ! எங்காத்திலே கொலு-நான் கிருஷ்ணன் வேஷம் போட்டுண்டு டான்ஸ் ஆடப் போறேன். நீங்க அவசியம் பார்க்க வரணும்.”

எனக்குச் சுரீரென்று இதயம் அடி வாங்கியது போல வலித்தது. கண்ணோரங்களில் ஈரம் கசிந்து விட்டது.

“நான் குங்குமம் வச்சுக்கப்படாது குழந்தே! உன் டான்ஸைப் பார்க்கறதுக்குக் கட்டாயம் வரேன், நீ சமத்தோ இல்லியோ! அடுத்தாத்துலே போய்க் கொடு...!”

“ஐயய்யே! இதென்ன மாமீ! எங்க அம்மா ஒங்க மாதிரித்தானே இருக்கா? அம்மா தினம் ரெண்டு மூணு தரம் குங்குமப் பொட்டு வச்சுக்கறாளே? நீங்க ஏன் வச்சுக்கப்படாது?”

“நான் அதுக்குக் கொடுத்து வைக்கலியே அம்மா! என்ன செய்யறது?”

“குங்குமப் பொட்டு வச்சிண்டா உங்க முகத்துக்கு எவ்வளவு நன்னாயிருக்கும் தெரியுமா? கொஞ்சம் உக்காருங்க மாமீ நானே வச்சு விட்டுடறேன்.” துறுதுறுவென்று இருந்த அந்தக் குழந்தையின் மலர்ந்த விழிகள், அகன்று விரிந்து ஆவலோடு என் முகத்தைக் கெஞ்சுகிற பாவனையில் ஊடுருவி நோக்கின.

நான் பூவையும், மஞ்சளையும், குங்குமத்தையும் இழந்தவள். அந்தக் குழந்தை அவற்றின் நிறைவான, மங்கல மயமான, பவித்ரம் செறிந்த வாழ்வை நோக்கி வளர்ந்து கொண்டிருப்பவள். என் பயங்கரத்தை - என் சோகத்தை - என் அமங்கலத்தை அதற்குப் புரிய வைக்க முயற்சி செய்வதை விட அதன் கெஞ்சுதலுக்குத்தான் தாற்காலிகமாக