பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / தெருவோடு போனவன் ★ 123



நான் பணிந்துவிட்டால் என்ன? 'குழந்தையையும் தெய்வத்தையும் ஏமாற்றக்கூடாது. அப்படி ஏமாற்றும்போது நாமே நம்மை அறியாமல் ஏமாற்றிக் கொள்கிறோம்’ என்று கேள்விப்பட்டிருந்தேன் நான்.

பாவமோ புண்ணியமோ,ஆகுமோ ஆகாதோ! அவற்றையெல்லாம் பற்றி எனக்குக் கவலை இல்லை. அந்தக் குழந்தை ஏமாந்து போய் நிராசையோடு திரும்பக்கூடாது. அதுதான் எனக்கு முக்கியம்.

நான் குனிந்து உட்கார்ந்தேன். என் நெற்றி அந்தப் புன்னகை நிறைந்த குழந்தையின் முகத்தை நோக்கி அண்ணார்ந்தது. தளதள வென்றிருந்த அந்தப் பிஞ்சுக் கையின் விரல்கள், ஆவலோடு குங்குமச் சிமிழில் நுழைந்தன. என் நெற்றி சிலிர்த்தது. பயங்கரமும் புளகமும் சமமாக விரவிய ஒர் உணர்வின் சலனம் என் உடல் முழுவதும் பரவியது. மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன!. அந்த இளம் உள்ளத்தின் திருப்திக்காக, என் முதிர்ந்து மரத்துப்போன மனத்தின் வேதனைகளை அடக்கிக் கொண்டு சிரிக்க முயன்றேன்.

பள்ளிக்கூடத்தில் படிக்க வரும் எண்ணற்ற குழந்தைகளைப் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது காண்கிறேன். அப்போதெல்லாம் மனத்தில் சாதாரணமான வெறும் சாந்திதான் நிலவுகிறது. ஆனால்..? இந்தக் குழந்தை!... இது தெய்வலோகத்தில், சிருஷ்டியின் திறனெல்லாம் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மலர், இதயத்தின் நிராசைகளையெல்லாம் அழித்து நெஞ்ச விளிம்பில் பொங்கும் ஆசைக் குமுறலை வளர்க்கும் நிர்மால்யம்!

மாதுளை அரும்பு போன்ற அந்தப் பிஞ்சு விரல்கள், என் சூனிய நெற்றியை நெருடின. குங்குமம் புருவங்களில் சிதறி விழுந்தது.

“எப்படி மாமீ! கண்ணாடிலே பாருங்கோ! நன்னாப் பொட்டு வச்சிருக்கேன்”

“ஆகட்டும் கட்டாயம் பார்க்கிறேன். நீ போயிட்டு வரியா?”

"நீங்க கொலுவுக்கு வரணும் மறந்துடப்படாது.”

“அவசியம் வரேன்! வந்து உன் டான்ஸைப் பார்க்க வேண்டாமா?” - பூமியில் உருளும் சண்பகப் பூப் பந்து போல், அந்தச் சிறுமி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே குங்குமச் சிமிழோடு அடுத்த வீட்டிற்குப் போனாள். வாசல் கதவைச் சாத்திவிட்டு, மறுபடியும் ஜன்னலோரத்து நாற்காலியில் போய்ச் சாய்ந்தேன். எதிரே நாற்காலி நிறையப் பள்ளிக்கூடத்துக் ‘காம்போஸிஷன்’ நோட்டுக்கள்! அருகே சிவப்பு மை நிறைந்த மைக்கூடு! கட்டைப் பேனா! கைக் கடிகாரத்தில் ஏழு மணி ஆகியிருந்தது. வழக்கமாக ‘டியூஷனுக்கு’ வருகின்ற பெண்களை இன்று இன்னும் காணவில்லை.

எனக்கென்று வாழ எதுவும் இல்லை. வெள்ளை வாயில் புடவையைப் புரளப் புரளக் கட்டிக் கொண்டு, கால் செருப்புத் தேயப் பள்ளிக்கூடத்துக்குப் போய்விட்டு வரும் இந்த உத்தியோகந்தான், ஆசையின் ஒரே சாதனம். வாழ்வு அழிந்துவிட்டது: வருஷங்கள் பல கழிந்துவிட்டன; ஆனால் ஆசை அழியவில்லை; உள்ளத்தால்