பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



விதவையாக, உடம்பால் வாத்தியாரம்மாவாக காலம் போய்க் கொண்டிருக்கிறது. காலத்தோடு காலமாக நானும் போய்க் கொண்டிருக்கிறேன். சிறை போன்ற வாழ்வு. பெரிய வீடு. ஒடுங்கிப் போன வாழ்வின் சிறிய பிம்பம். உயிரோடு பிணமாக உலாவி வருகிறேன். மனத்தின் சாந்தியை மங்காமல் காப்பாற்றும் இந்த உத்தியோகமும் இல்லை என்றால், என்றைக்கோ, தூக்குக் கயிறோ, கொல்லைக் கிணறோ, இந்த ஏழை ஆத்மாவைப் பலிகொண்டு போயிருக்கலாம். அதில் வியப்பென்ன? பயங்கரமென்ன? வாழ முடியாதவர்களுக்கு, எல்லைக்கு அப்பால் பிடித்துத் தள்ளப்பட்டவர்களுக்குச் சாவு ஒரு சஞ்சீவி அல்லவா?

“டீச்சர்! டீச்சர்!... கதவைத் திறங்க டீச்சர்!” எழுந்திருந்து போய்க் கதவைத் திறந்தேன். குஞ்சுவும் ராஜமும் தான் வந்திருந்தார்கள்.

“என்னடி இது? நீங்க புஸ்தகம் கொண்டு வரலியா?”

“இல்லே டீச்சர்.”

“இப்ப என்ன காரியமா வந்தீங்க ரெண்டு பேரும்”

ராஜமும், குஞ்சுவும் பதில் சொல்லாமல் என் முகத்தையே வெறித்து வெறித்துப் பார்த்தனர். பின் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்னடீ? என் முகத்திலே ஏதாவது எழுதி ஒட்டியிருக்கா? கேட்டதுக்குப் பதில் சொல்லாமே இப்படிப் பார்க்கிரீங்க?"

“இல்லே டீச்சர்... நீங்க ஒரு நாளும் நெத்தியிலே குங்குமம் வச்சுக்கமாட்டீங்களே?. இன்னிக்கு மட்டும் வச்சிண்டிருக்கீங்களே...?”

என் தவறு எனக்கு அப்போதுதான் புரிந்தது. குழந்தை போனதும் அதை நான் அழித்திருக்க வேண்டும். மறந்துவிட்டது.

"ஓ! இதைச் சொல்றீங்களா?- இதுவந்து...இதை ஒரு குழந்தை விளையாட்டுக்காக வற்புறுத்தி இட்டுட்டுப்போச்சு” என்று சொல்லிக் கொண்டே அவசர அவசரமாக அதை அழித்தேன்.

"ஏன் டீச்சர் அழிச்சிட்டீங்க? உங்க நெத்திக்கு அழகா இருந்துதே?”

"அது சரி, வந்த காரியத்தைச் சொல்லுங்க”

"நவராத்திரி முடியற வரைக்கும் கொலுவுக்கு இருக்கணுமாம்; ‘டியூஷன்’ வேண்டாம்னு அம்மா சொல்லச்சொன்னாங்க்."

“சரி போயிட்டு வாங்க...அப்போ இன்னும் ஏழெட்டு நளைக்கு ‘டியூஷனுக்கு’ வரமாட்டீங்க?... இல்லியா?”

"ஆமாம் டீச்சர்.”

தலைநிறைய மல்லிகைப் பூ கொத்துக் கொத்தாக அசைய, சடைக்குஞ்சலங்கள் ஆட ராஜமும் குஞ்சுவும் தெருவில் திரும்பி நடந்து மறைந்தார்கள்.