பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / தெருவோடு போனவன் ★ 125



பொட்டை அழித்துவிட்டேன்.மீண்டும் ஒரு பிரமை!அந்தக் குழந்தையின் பட்டுக் கையிலுள்ள பிஞ்சு விரல்கள்,நெற்றியில் அழுத்திக் குங்குமத்தைத் தேய்ப்பதுபோல ஒரு உணர்வு. சுருட்டை சுருட்டையாக மயிர் புரளும் முன் நெற்றிக்கும், அடர்ந்த புருவங்களுக்கும் இடையே அந்த உணர்வின் விளைவாக ஒரு கிளுகிளுப்பு ஊடுருவிக் கொண்டிருந்தது. எண்ணங்களின் அடக்க முடியாத வேகம். சிறைப்பட்ட தண்ணீர் உடைத்துக் கொண்டு பெருகுவதுபோல, இதயவெளியில் பாய்ந்து கொண்டிருந்தது.

ஒரு பெண் கல்யாணமாகாமல் அனாதையாக வாழ்ந்துவிடலாம். கல்யாணம் ஆனபின் கணவனுக்கு முந்திக் கொண்டு இறந்துவிடலாம். ஆனால் வாழ வேண்டிய பருவத்தில், வாழ்கின்றவர்களுக்கு நடுவே, வாழாதவளாக ‘விதவை’ - என்ற பேரில் உயிரோடிருப்பதைப் போலச் சித்திரவதை வேறில்லை.புஷ்பங்களுக்கு நடுவே கிடந்து புரளும் சுகம்போல, யெளவன மலர்களாகிய பெண்களின் பள்ளிக்கூடத்தில் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் வேலையை ஏற்றுக் கொண்டேனோ, இல்லையோ, அதனால்தான் பிழைத்தேன்! மனம் வழி தவறிய ஆசைகளின் ஒழுங்கற்ற மார்க்கங்களிலோ, ஆசைகளின் கொட்டத்துக்கு முடிவு காட்டும் சாவிலோ செல்லாமல், பொறுத்துக்கொண்டு செல்வதற்குக் காரணம் குழந்தைகளின் முகம்தான்.

இன்னும் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்குப் பள்ளிக்கூடம் கிடையாது. தசரா விடுமுறை. ராஜமும், குஞ்சுவும்கூட ‘டியூஷனுக்கு’ வருவதற்கில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.தனிமை! தனிமை! இந்தப் பெரிய வீட்டில், சிறிய உள்ளம் அலைமோதும் ஏக்கத்தினிடையே எப்படித்தான் தத்தளிக்கப் போகிறதோ? எண்ணங்களை எண்ணிப் பார்ப்பதற்கே நேரமில்லாமல், மனத்தை மற்றவர்களுக்கு நடுவே அவர்களுடைய கோலாகலத்தில் மூழ்கச் செய்துவிட்டால், வாழ்வின் அமங்கலமான பயங்கரம், தனிமையின் ஏக்கம், எல்லாம் மறைந்து விடும், போர்வையால் உடலை மூடிக் கொண்டதும், அதுவரை வெடவெடக்கச் செய்து கொண்டிருந்த குளிர் மறைகின்ற மாதிரி!

கண்களைச் சொருகிக் கொண்டு தூக்கம் இமை வழியே கனமாக இறங்கிக் கொண்டிருந்தது. மணி ஒன்பதுகூட ஆகவில்லை. வழக்கமாகத் துங்குகின்ற நேரமும் இல்லை அது! ஆனால் என்னவோ தெரியவில்லை! காரணத்தைச் சொல்லிக் கொண்டா வருகிறது தூக்கம்? அப்படியே நாற்காலியில் தலையைச் சாய்த்தேன். சாப்பாடு?... அதைப் பற்றிய ஞாபகமே எனக்கு உண்டாகவில்லை. ஜன்னல் வழியே புகுந்த தெருவோரத்துப் பன்னீர் மரத்தின் குளுமையான வாசனை நிறைந்த காற்று, முகத்தில் ஜிலுஜிலுவென்று விளையாடியது.இந்தக் காற்றின் ஸ்பரிச சுகத்திற்கு வேறு உவமை சொல்ல வேண்டுமானால், அந்தக் குழந்தையின் பிஞ்சு விரல்கள் என் நெற்றியில் பொட்டு இட்டனவே, அந்த ஸ்பரிச சுகத்தைத்தான் சொல்ல வேண்டும்.

நெற்றியில் பளபளவென்று கருமை மின்னும் சாந்துப் பொட்டு வைத்துக்கொள்கிறேன். நாசித் துவாரங்களைத் தெய்வலோகத்திற்கு இழுத்துச் செல்லும் மணம்மிக்க குடை மல்லிகைச்சரத்தைப் பந்து பந்தாகச் சுருட்டித் தலையில் வைத்துக்கொள்கிறேன். ரோஜா நிற ஜார்ஜெட் புடவை, உடலில் பட்டும்