பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



படாததுபோல மென்மையாக ஒட்டிக்கொண்டிருந்தது. கையில் தேங்காய் பழக்கூடையை எடுத்துக்கொண்டு, அம்மன் சந்நிதிக்குள் நுழைகிறேன்.

கோவில் வாசலில் யாரோ ஒரு சிறுமி இரைந்து கத்தி என்னை கூப்பிடுகிறாள். திரும்பிப் பார்க்கிறேன். கையில் எண்ணெய்க் கிண்ணத்துடன் அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டு நிற்கிறாள்.

“மாமீ! மாமீ! இப்ப நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா? எங்க அம்மாகூட இவ்வளவு அழகு இல்லை."

அழகின் அளவுக்கு வரம்பு கட்டிவிடுகிறவளைப்போல, அந்தச் சிறுமி இரண்டு கையையும் நீட்டி விரித்து உதடுகளைக் குவிய வைத்துக் கொண்டு மலர மலரக் கண்களை விழிக்கிறாள்.

கையை விரித்தபோது, வலது கையிலிருந்த எண்ணெய்க் கிண்ணம் கீழே விழுந்து எண்ணெய் கொட்டிவிடுகிறது!

"ஐயையோ! எண்ணெய் கொட்டிட்டுதே மாமீ! எங்கம்மா கோவில் விளக்குலே விட்டுட்டு வரச் சொன்னாளே. இன்னிக்கு அடிதான் வாங்கப் போறேன்.”

“வெளக்குலே விட்டுட்டேன்னு அம்மாக்கிட்டப் போய் பொய் சொல்லிடேன்”

“பொய் சொல்லப்படாது மாமீ! அம்பாள் கண்ணை அவிச்சுப்பிடுவா, பாவம்..”சிறுமியின் கண்களில் உலகெங்கும் தேடினாலும் காணக்கிடைக்காத பயபக்தியின் சாயல் மின்னுகிறது.

"அழாதே! வாசல்லே எண்ணெய்க் கடை இருக்கு. இந்தா, இந்தக் காசைக் கொண்டுபோய்க் கொடுத்துக் கிண்ணத்துலே எண்ணெய் வாங்கிண்டு வா... அதுவரை நான் இங்கேயே நிற்கிறேன்”. ஒரு முழு ஒரணா நாணயத்தை அந்தக் குழந்தையின் கையில் வைக்கிறேன்.

தங்கக் குத்துவிளக்கு ஒன்று, கையும் காலும் பெற்று ஓடின. மாதிரி 'குடுகுடு’ வென்று கிண்ணத்தோடு கோயில் வாசலிலிருந்த கடையை நோக்கி ஒடுகிறாள் சிறுமி.

அவள் கிண்ணத்தில் எண்ணெயை வாங்கிக் கொண்டு ஓடிவருகிறாள். சிறுமியின் கையைப் பிடித்துக் கொண்டு சந்நிதிக்குள் நுழைகிறேன். கோவில்மணி, பாவத்தின் மேல் விழும் சவுக்கடியைப் போல ‘கணீர் கணீரெ’ன்று முழங்குகிறது.

நான் விழித்துக் கொண்டேன். கனவு கலைந்துவிட்டிருந்தது. தொலைவிலிருந்த மாதா கோவிலின் கால அறிவிப்பு மணி, பன்னிரண்டு முறை அடித்து ஒய்ந்து கொண்டிருந்தது. மணி அடித்து ஒய்ந்தபின்பும், ஒலியின் அலைகள் சிறிதுநேரம் ஓயாமல் செவித் துளைகளில் 'கிணுகினு’த்துக் கொண்டிருந்தன. கனவு கலைந்துவிட்டது. கனவைப் பற்றிய இனிய நினைவுகள் மனத்திலிருந்து கலையவேயில்லை: ஒசை ஒய்ந்துவிட்டது, ஆசை ஒயவில்லை! மனம் மரத்துப் போகவில்லை! விந்தைதான்..!