பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / தெருவோடு போனவன் ★ 127



விளக்குகளை அணைத்து விட்டுப் படுக்கையை விரித்துப் படுத்தேன். சுற்றிலும் நித்திரைக்கு நடை பாவாடை விரித்து வைத்ததுபோல ஒரே இருட்டு. ஜன்னலுக்கு வெளியே தெரு விளக்குகள் உறங்காமல் ஒடுங்காமல் கடமை வீரர்களைப் போல எரிந்து கொண்டிருந்தன. என்னைச் சுற்றிலும் இருட்டு. இருட்டைச் சுற்றிலும் நான்; இருளில் உறங்கும் இருளைப்போல, வாராத உறக்கத்தை வரவழைக்க முயன்று, வலியக் கண்களை மூடிக் கொண்டு பார்த்தேன். கவலைக்கும், உறக்கத்திற்கும் என்ன பகைமையோ, தெரியவில்லை.

பொழுது விடிந்தது. விடிந்த வேகத்தில் வளர்ந்தது.காலை நண்பகலாகி, நண்பகல் பிற்பகலாகி, பிற்பகல் மாலை என்ற பெருங்கிடங்கில் வந்து தேங்கியது.

“மாமீ... மாமீ.!.. கதவைத் திறங்க மாமீ!” - வரத்தை நாடி ஒடும் பக்தனைப்போல, ஒடிப் போய்க் கதவைத் திறந்தேன். அந்தத் தெய்வீகக் குழந்தை, கையில் குங்குமச் சிமிழோடு நின்று கொண்டிருந்தாள்.

நான் நேற்றுப் போலவே மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டேன். சிறுமி சிரித்துக்கொண்டே, என் புருவங்களுக்கிடையே குங்குமம் தோய்ந்த பிஞ்சு விரல்களை அழுத்தினாள். என் நெற்றி நரம்புகளுக்குள் ‘குபுகுபு’ வென்று மின்சாரத்தை அள்ளிப் பாய்ச்சியது அந்த ஸ்பரிசம். அவளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அவளோடு சேர்ந்து கொண்டு நானும் சிரித்தேன். மீண்டும் என்னைக் கொலுவுக்கு வரச்சொல்லி வற்புறுத்திவிட்டுப் போய்ச்சேர்ந்தாள் அந்தச் சிறுமி.

திறந்த கதவை அடைத்தேன். இதயத்தையும் நினைத்தபோதெல்லாம் இப்படி அடைத்துவிட முடியுமானால், எவ்வளவு நன்றாக இருக்கும்? ஜன்னலோரத்து நாற்காலியில் என் உடம்பைச் சரணடைத்தேன். தெருவோரத்துக் காட்சிகளைக் கண்கள் பிடித்துக்கொண்டன.

சாரி சாரியாக நகைகளும், புதுப் புடவைகளும் மின்ன, நெற்றி நிறையத் திலகமும், தலை நிறைய பூவுமாகக் கொலு வீடுகளுக்குச் சென்றுவரும் பெண்கள், தெருவை நிறைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

ராஜமும், குஞ்சுவும் வந்து கதவைத் தட்டினார்கள். ஏதோ கலியாணப் பெண்கள் மாதிரி உடலெல்லாம் மினுக்க ஒரு அலங்காரரம்! தலை நிறையப் பூ!

கொலுவுக்குச் செய்தது என்று ஏதோ பட்சணங்களைக் கொண்டு வந்து வைத்து விட்டு, விடை பெற்றுக் கொண்டு போனார்கள்.

"மல்லிகைப் பூ! மல்லிகைப் பூ! முழம் அரையனாத்தான்.”

இதயத்தின் அந்தரங்கமான மூலையொன்றில், வெட்கத்தை மறந்து தனிமையின் துணிவில் ஒரு சிறு ஆசை துளிர்த்தது.

'ஏய், பூ இங்கே கொண்டா!” - எனக்கு எங்கிருந்துதான் அவ்வளவு துணிச்சல் வந்ததோ? எனக்கே தெரியவில்லை!