பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



"யாரும்மா? நீங்களா கூப்டிங்க?"

"ஆமாம், வா." பூக்காரன் என்னை ஒரு தினுசாகப் பார்த்துக்கொண்டே கூடையை என் வீட்டு வாசலில் கொண்டு வந்து இறக்கினான்.

"நாலு முழம் நல்ல மல்லிகைப் பூவாப் பார்த்துக் கொடு.”

அவன் பூவைக் கொடுத்தான். நான் காசைக் கொடுத்தேன்.

"ஏம்மா வீட்டுக்கு வேறே யாராச்சும் வந்திருக்காங்களா?”

"ஏன்? எதற்காக இப்படிக் கேட்கிறே நீ?"

“இல்லே! பூ வாங்கினீங்களே அதனாலே கேட்டேன். நீங்கதான் வச்சுக்க மாட்டீங்களே?” - அவன் போய்விட்டான்.

பூவோடு ஒரு அர்த்தம் நிறைந்த கேள்வியையும் என்னிடம் தொடுத்து விட்டுப் போய்விட்டான். இதயத்தின் அடிவிளிம்பில் ‘ஜிலுஜிலு’ வென்று ஆடிக் கொண்டிருந்த ஆசையின் இளந்தளிர், ‘வெடவெட'வென்று நடுங்கியது. பூவை வைத்துக்கொள்ள இடமுண்டு. தலையிருக்கிறது! அதுவும் இல்லாவிட்டால் தரை இருக்கவே இருக்கிறது. அந்தக் கேள்வி?... அதை எங்கே வைத்துக் கொள்வேன்? இதயத்தில் வைத்துக் கொண்டால், இதயம் வெந்து போய்விடுமே?

முடிவில் ஆசைக்குத்தான் வெற்றி! தொலை தூரத்தில் மங்கிக் கொண்டிருந்த, ‘மல்லிகைப் பூ! மல்லிகைப் பூ...’ என்னும் அவனுடைய குரலின் ஒடுங்கிய தொனியைப் போலவே, அந்தக் கேள்வியும் ஒடுங்கிவிட்டது.

கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டேன். உள்ளே போய் அலமாரியைத் திறந்தேன். மழைக்காலத்து அருவியின் பிரவாகத்தைப்போல, கள்ளத்தனமான அந்த ஆசை உள்ளத்தைச் சிறியதாக்கி விட்டுத் தான் பெரிதாகிக்கொண்டிருந்தது.

எதிரே பெரிய நிலைக்கண்ணாடி வஞ்சகமில்லாமல் இருபத்தெட்டு வயது வாலிபத்தின் பெண்மை அழகை அப்படியே காட்டியது. என்றோ நடந்து என்றோ பாழாகவும் போன, கல்யாணக் கூறைப் புடவையை, நடுங்கும் கைகளால் பிரித்துக் கட்டிக் கொண்டேன். அலமாரிக்குள் கைப்பெட்டி நிறைய அடைபட்டுக் கிடந்த எல்லா நகைகளும் என் உடலில் தத்தம் பதவிகளை அடைந்தன. காதுகளில் வைரத் தோடுகள் மின்னின. கழுத்தில் ‘நெக்லேஸ்’, இரட்டை வடம் சங்கிலி, காசுமாலை! கை நிறையப் பொன் வளையல்கள், மூக்கில் சுடர் தெறிக்கும் மூக்குத்தி, நெற்றியில் அந்தக் குழந்தை தீற்றிவிட்டுப் போன மெல்லிய குங்குமக் ‘கீறல்’. தலையை வட்டமாக முடிந்து கட்டிப் பிச்சோடாப் போட்டு, நாலு முழம் மல்லிகைப்பூவையும் சந்திரப்பிறைபோல் சூட்டிக் கொண்டேன்.

பூவைச் சூட்டிக் கொள்ளும்போது மட்டும் கைகள் கொஞ்சம் நடுங்கின! பூக்காரன் கேட்டுவிட்டுப் போன அந்தக் கேள்வி? சாட்டையைச் சொடுக்கி உதறியதுபோல, மனத்தில் ஒரு மின்வெட்டு வெட்டியது!