பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / தெருவோடு போனவன் ★ 129



கண்ணாடி வாழ்க! வெள்ளைப் புடவையும் மூளிக் காதுகளுமாகப் பாலைவனம் போலிருந்த என்னை, பத்தே நிமிஷங்களில் யெளவனம் ததும்பி வழியும், பருவ அழகு நிரம்பிய சுமங்கலியாகக் காட்டிவிட்டதே? இப்படியே தெருவில் இறங்கி நடந்தால் நான் ‘விதவை’ என்று சத்தியம்செய்தால்கூட யாரும் நம்பமாட்டார்களே? கனமான பட்டுப் புடவை, வழுக்கலும் மொடமொடப்புமாக உடம்பை யாரோ கட்டித் தழுவுகிற மாதிரி எவ்வளவு இதமாக இருக்கிறது? என்னையறியாமலே என் வாய், தானாக ஒரு புன்னகையை இதழ் ஒரங்களிடை நழுவவிட்டது! கண்ணாடியில் பார்க்கிறபோது, அந்தப் புன்னகை என்னையே ஒரு மயக்கு மயக்கிக் கிறங்க வைத்தது.

அலமாரியைச் சாத்தி விட்டுக் கண்ணாடிக்கு முன்பிருந்து, கூடத்துப் பக்கம் வந்தேன்! ‘லேடீஸ் வாட்ச்’சின் - சிறிய எண்கள் தெரியவில்லை. விளக்கைப் போட்டு மணிக்கட்டை உயர்த்தி கைக்கடிகாரத்தில் மணி பார்த்தேன். ஏழரை மணி ஆகியிருந்தது.

சில நிமிஷங்களுக்குள் வாழ்க்கையின் ஓரத்தில் ஒதுக்கியிருந்த என்னுடைய எல்லா அமங்கலங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டதாக ஒரு பிரமை, அதற்குப் பதிலாக, இதுவரை கிடைக்காமல் இருந்த, அல்லது கிடைக்கவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த சகல செளபாக்கியங்களும் பூர்ணமாகக் கிடைத்து, சுமங்கலியாக வாழ்வின் மலையுச்சியில் நிற்பதாக ஒரு எண்ண மிதப்பில், நீந்திக் கொண்டிருந்தேன். உடல் முழுவதும் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை இன்னதென்று இனவரம்பில் அடங்காத - அடக்கவும் முடியாத ஒரு பூரிப்பு ‘கிளுகிளு’த்துக் கொண்டிருந்தது.

கைகளில் வளைகள் குலுங்கின. காதுத் தோடுகளின் ஒளிச் சிதறல் சுவரில் ‘டால்' அடித்தது. நடந்து போய் அப்படியே ஜன்னலருகிலிருந்த நாற்காலியில் ‘பொத்'தென்று உட்கார்ந்தேன். வீடு நிறைய எல்லா மின்சார விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. தெருவைப் பார்த்து இருந்த பெரிய ஜன்னல், முழுமையாகத் திறந்து கிடந்தது. அந்த ஒளி வெள்ளத்தின் இடையே மங்கலமயமான எண்ணத்தோணியின் மிதப்பில், எங்கோ கண்காணாத வாழ்வின் பூரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, ஒரு சொப்பன அவஸ்தையில், நினைவுள்ளபோதே அமுங்கி ஆழ்ந்து கீழே, கீழே, கீழுக்கும் கீழே செளபாக்கியத்தின் அதலத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன்.

நெஞ்சின் ஆழத்தில் எங்கோ ஒரு கோடியைத் தவிர, மற்றெல்லா இடங்களிலும் ‘நான் செளபாக்கியவதி, நான் செளபாக்கியவதி’ என்று மெளனத்தின் ஒசையில்லாத குரலில், பாஷையில்லாத சொற்களில், அர்த்தமில்லாத குறிப்பு ஒன்று கிளர்ந்து கொண்டிருந்தது. பாதத்தின் அடிப்புறம் முள் தைத்து வீங்கினால், செங்கல்லைச் சுட வைத்து ஒத்தடம் கொடுக்கும்போது அந்தச் சூடு வெது வெதுப்பாய் இதமாக இருக்குமல்லவா? அது மாதிரித்தான் இந்த செளபாக்கிய சொப்பனாவஸ்தையில், என் உடம்பு புளகித்துக் கொண்டிருந்தது.

நா.பா. 1 - 9