பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



தூக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில், ஜாக்கிரமுமில்லாமல் சொப்பனமுமில்லாமல் மதுவுண்ட வண்டு போல, தெருவைப் பார்த்தும் பார்க்காமலும் நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தேன். ஜன்னலோரமாகத் தெருவில் தன் போக்கில் நடந்து வந்து கொண்டிருந்த யாரோ இருவர், இரைந்து பேசிக் கொண்டு போனார்கள்.

“அட! நீ ஒண்ணு-அவ அறுத்த முண்டையா லட்சணமாவா வீட்டிலே அடைஞ்சு கிடக்கிறா?... பூவும்,பொட்டும், நகையும், புடவையுமாகக் குலுக்கி மினுக்கிக்கிட்டுல்ல திரியுறா!”

யாரைப் பற்றியோ, கூட வந்தவனிடம் கத்திக் கொண்டு போனான் அவன். என் நெஞ்சு ஒரு குலுக்குக் குலுக்கி ஒய்ந்தது. தலை நிறைய நெருப்பை வாரி வைத்த மாதிரி ஒரு வலி. நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்தேன். குபீரென்று மெயின் சுவிட்சை அமுக்கினேன்! வீடு இருண்டது. கழுத்தில் காசு மாலை பாம்பு மாதிரி நெளிந்தது. பட்டுப்புடவை உடம்பில் ஒட்டவே இல்லை. ‘சுளீர், சுளீர்’ என்று சவுக்கடிகள் விழுகின்ற மாதிரி, உடம்பில் ஒரு வேதனை.செளபாக்கியம் என்ற சொப்பனாவஸ்தைப் படகு, சில்லுச் சில்லாக உடைந்தது. உள்ளத்தால் அமங்கலி, உடலாலே மட்டும் சுமங்கலியாகி விட முடியுமா? புடவையை அவிழ்த்து எறிந்தேன். நகைகள் மூலைக்கொன்றாகச் சிதறின. இருண்ட வீட்டின் மூலையில் ஆசைப்பட்டுத் தேடிய எனது தாற்காலிக செளபாக்கியத்தைக் கலைத்த அவன் யார்? யாரோ தெருவோடு போனவன்!

(ஆனந்த விகடன், அக்டோபர், 1957)