பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. தெய்வத்தால் ஆகாதெனினும்

கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக மைத்துனன் சென்னையிலிருந்து வந்திருந்தான். ராஜத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அருமைத் தம்பியை வரச் சொல்லி விடுமுறை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வருந்திக் கடிதம் எழுதினவள். வந்தபின் மகிழ்வதற்குக் கேட்கவா வேண்டும்?

ஆனால் என்னுடைய அந்த அழகான மைத்துனன் பட்டணத்துக் கல்லூரிகளில் பாடத் திட்டத்துக்குள் அடங்காத சில விஷயங்களையும் படித்துக் கொண்டு வந்திருந்தான். வந்து இரண்டு நாட்களுக்குள்ளேயே அவனுடைய மாறுதலை நான் கண்டு பிடித்து விட்டேன். எதையெடுத்தாலும் மூட நம்பிக்கை என்றான். மற்றவர்கள் நம்புவது எதையும் அவன் நம்புவதற்குத் தயாராயில்லை. ஆனால் அவன் நம்புவதை எல்லோரும் நம்ப வேண்டுமென்று ஆசைப்பட்டான். எதற்கெடுத்தாலும் காரணமில்லாமலே காரசாரமாக விவாதித்தான். எங்கும் நிதானம் இழந்து உணர்ச்சியைக் கொட்டிப் பேசக் கற்றுக் கொண்டு வந்திருந்தான்.

“ஐயோ, பாவம்! இந்தப் பிள்ளை இப்படிக் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்டு வந்த மாதிரி அறிவைக் கற்றுக் கொள்ளப் போன இடத்தில் அறியாமையைக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறதே!” என்று என் மனம் உள்ளூர வருந்தியது.

ஆனால் ராஜம் தன் தம்பியின் இந்த மாறுதல்களைப் புரிந்து கொண்டதாக வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை. ‘அம்பி அம்பி’ என்று ஒடியாடி உபசரித்துக் கொண்டிருந்தாள். வாராது வந்த மாமணியைக் கண்டவள் போல் அன்பை அள்ளிச் சொரிந்தாள்.

அன்பும் பாசமுமுள்ள இடத்தில் குறைபாடுகள் இருந்தாலும் தெரிவதில்லை. தவிர பெண்களின் இயற்கை அவர்களைப் பாதிக்காத வரையில் இத்தகைய குறைகளைப் பொருட்படுத்தத் தோன்றாது.

“என்ன ராஜம்! உன் தம்பி ஒரு மாதிரி இருக்கிறானே! பழக்க வழக்கங்கள், பேச்சு, கொள்கை, எல்லாம் மாறியிருக்கின்றனவே! பார்த்தாயா?” என்று நானே ஒரு நாள் அவளைக் கேட்டு விட்டேன்.

“அதற்கென்ன செய்கிறது? இந்தக் காலத்தில் இந்த வயசில் எல்லாப் பிள்ளைகளுமே இப்படித்தான் இருக்கிறார்கள்.”

“எதற்கெடுத்தாலும் அவன் எடுத்தெறிந்து பேசுகிறானே?”

“அது அவனுடைய சுபாவம். ஏதோ நாலு நாளைக்கு இருந்து விட்டுப் போகலாமென்று வந்திருக்கிறான். இந்தச் சிறிய விஷயத்தைப் பெரிசு படுத்தாதீர்கள்:”