பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / தெய்வத்தால் ஆகாதெனினும் ★ 133



ஸ்நோ பூசித் தலையைக் ‘கர்லிங்’ விழும்படியாக அக்கறையுடன் வாரி விட்டுக் கொண்டிருந்தான். சினிமாப் பாட்டு ஒன்றை அவன் வாய் சீட்டியடித்துக் கொண்டிருந்தது. அரை மணி நேரமாக அவன் தலை சீவிக் கொள்ளும் இலட்சணத்தைப் பார்த்தபோது, ‘தலையிலுள்ள மயிர் முழுதும் உதிர வேண்டும் அல்லது சீப்பிலுள்ள பல் முழுதும் உதிர வேண்டும்’ என்று போட்டி போடுகிறது போல் தோன்றியது.

‘சரி! பையனுக்குப் புத்தி வந்துவிட்டது. நம்முடன் கோவிலுக்கு வருவதற்காகத்தான் இவ்வளவு அலங்காரங்களும் செய்து கொள்கிறான் போலிருக்கிறது. பயல் அம்னைத் தரிசிக்க வராவிட்டாலும் அம்மனைத் தரிசிக்க வரும் 'அம்மன்’களைத் தரிசிக்கவாவது வருவான்!” என்று எண்ணி உள்ளூர நகைத்துக் கொண்டேன்.

அவன் 'மேக்அப்’பை முடித்துக்கொண்டு அறையிலிருந்து கூடத்துக்கு வந்தான். நேரே என்னிடம் வந்து கேட்டான். “அத்தான்! எல்லாருமாகச் சேர்ந்து ஒரு சினிமாவுக்குப் போகலாம்!” என்றான்.

“நாங்கள் கோவிலுக்குப் போகிறோம். இன்றைக்கு வெள்ளிக்கிழமை. நீ வேண்டுமானால் சினிமாவுக்குப் போய் விட்டு வா!” என்று பதில் சொன்னேன்.

அவன் அக்காவிடம் போனான்."அத்தான் கோவிலுக்குப் போகட்டும். நீவாயேன் அக்கா, குழந்தையை எடுத்துக் கொண்டு நாம் சினிமாவுக்குப் போய்விட்டு வரலாம்.”

“இல்லையடா, அம்பி! மதுரைக்கு வந்து மூன்று வருஷங்கள் ஆயிற்று. ஒரு வெள்ளிக்கிழமைகூடத் தவறினதில்லை. நீ போய்விட்டு வா. நாங்கள் கோவிலுக்குப் போகிறோம்.”ராஜமும் அவன் வேண்டுகோளை மறுத்து விட்டாள். மைத்துனனுக்குப் பெரிய ஏமாற்றம், முகம் தொங்கிவிட்டது. திடீரென்று என்ன நினைத்துக் கொண்டானோ தெரியவில்லை. எனக்கு முன்னால் வந்து விறைப்பாக நின்றுகொண்டான். கேட்க ஆரம்பித்தான்.

"நீங்கள் படித்துப் பட்டம் பெற்றவர்தானே?”

"ஆமாம்!”

"சுயமாகச் சிந்திக்கும் பகுத்தறிவு உள்ளவர்தானே?”

"ஆமாம்!”

“உண்மை எது? போலி எது? என்று அறியத் தெரிந்தவர் தானே?”

“தெரியும்”

"அப்படியானால் கோவிலும், குளமும், சாமியும், பூதமும் இந்தப் போலிப் பாவனைகளில் இருப்பதாக எப்படி நம்புகிறீர்கள்?”

"சீ! இதென்னடா முரட்டுத்தனமாக உளறிக்கொண்டு.” ராஜம் அவனைக் கடிந்து கொண்டாள். குழந்தை குஞ்சு மிரள மிரள எங்கள் இருவரையும் பார்த்து விழித்துக்கொண்டு நின்றாள்.