பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



விழுந்தது. வாணி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். ‘தில்லை’ பின்புறம் கலகல வென்று சிரித்துக் கொண்டு நின்றான்.

வாணியும் சிரித்தாள். “கலாசாலை அப்போதே முடிந்துவிட்டதே! உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு நேரம்” என்று கேட்டாள்.

"நீங்களெல்லாம் மாணவர்கள்! கலாசாலை முடிந்ததும் நினைத்த இடத்திற்கு ஓடிவந்துவிடலாம். நான் ஆசிரியன். என் பொறுப்புக்களை முடித்து விட்டுத்தானே வரவேண்டும்? மேலும் இன்று கலாசாலை அதிபர் வந்திருந்தார்.”

“யார்? நந்தகுமாரா..?”

"ஆமாம் வாணி அவர்தான் வந்திருந்தார்.”

அவன் அவள் அருகில் உட்கார்ந்தான். தெளிவாக இருந்த அச்சன் ஓடை நீர்ப்பரப்பில் அவர்களுடைய ஜோடி நிழல் ஆடி அசைந்தது.

தில்லை, நந்தகுமாரின் பரதவித்யாபவனத்தில் ஒர் நடன ஆசிரியன். நடனத்திற்கு என்றே படைக்கப்பட்டது போன்ற மன்மத சரீரம் அவனுக்கு. இருபத்தைந்து அல்லது இருபத்தாறு வயது இருக்கும். பெண்மையின் நளினமும் ஆண்மையின் கம்பீரமும் கலந்த சுந்தரபுருஷன். நல்ல இதயமும், இனிய குரலும், அன்பாகப் பழகும் சுபாவமும் அவனிடம் அடைக்கலமாகியிருந்த நற்குணங்கள்.

வாணி, தென் கேரளத்தில் உள்ள ஜனார்த்தனம் என்ற ஊரில் பிறந்தவள். தாயை இழந்து தந்தையின் ஆதரவில் படித்துக் கொண்டிருந்தபோது, தந்தையையும் பறி கொடுத்து அனாதையானாள். அவளுடைய தாய்மாமன் ஒருவர் எங்கெங்கோ சிபாரிசுகள் பிடித்து நந்தகுமாரின் பரதவித்யா பவனத்தில் கொண்டு வந்து சேர்த்துவிட்டுப் போனார். வித்யாபவனத்தில் கற்பிக்கப்படும் கலைகளில் அவளுக்கு இருந்த ஆர்வத்தையும் திறமையையும் ஆசிரியர்கள் பாராட்டியதனால் தொடர்ந்து அங்கே வசதிகளைப் பெற்றுக் கற்கும் வாய்ப்பும், ஊக்கமும் அவளுக்கு ஏற்பட்டன. இந்த வாய்ப்பையும், ஊக்கத்தையும் அவளுக்கு ஏற்படுத்தியதில் முக்கியத்துவம் தில்லைநாதனுக்கு உரியது.

கேரள தேசத்துக்கென்றே அமைகின்ற வாளிப்பான சரீரமும் உயரமும் பெற்ற வாணி, அந்த இளம் நடன ஆசிரியனின் உள்ளத்தில் அழியா இடம் பெற்றுவிட்டாள். கலைத்துறையில் அந்தப்பெண்ணுக்கு நடனம் கற்பிப்பதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதினான் அவன். வித்தியா பவனத்தில் இருபத்தைந்து யுவதிகள் அவனிடம் நடனம் கற்று வந்தனர். அத்தனை பேரிலும் அவன் இதயத்தில் நடனம் ஆடியவள் வாணி ஒருத்திதான்.வாணியின் இதயத்திலோ அந்த இளம் நடன ஆசிரியனைப் பற்றிய இனிய எண்ணங்கள் குடலைக்குள் இட்டுவைத்த சண்பகப் பூக்களைப்போல வாசம் மண்டிக் கிடந்தன.

தில்லைநாதன் வாணியின் மேலும் வாணி தில்லைநாதன்மேலும் கொண்ட கலைக் காதல், குணங்களின் சங்கமத்தில் தோன்றிய தெய்வீகக் காதல். தொடக்கத்தில்