பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வாழ்வில் நடவாதது ★ 143



தில்லைநாதன் தன் சட்டைப்பையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து வாணியிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கிக் கொண்டாள். ரசம் பூசிய கண்ணாடியில் ஆவி படிந்து ஒளி மங்குவதுபோல நுணுக்கமான மாறுபாடு ஒன்று அவள் முகபாவத்தில் ஏற்பட்டது. வாணி பதில் பேசாமல் மெளனமாக ஆழம் காண முடியாத அமைதியுடன் கடிதத்தை அப்படியே அவனிடம் திருப்பிக் கொடுத்தாள்.

“ஏன்? படிக்கவில்லையா வாணி?”

"கூடாது! நீங்கள் இந்தக் கடிதத்தை என்னிடம் கொடுத்ததே தவறு. என்னைப் போலவே நளினியும் ஒரு பெண்! உங்களைப் பற்றி அவள் மனத்தில் நிறைந்திருக்கும் உணர்ச்சி வேகங்களை நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. உங்களை நான் உறுதியாக நம்புகிறேன்.”

“என்னை உறுதியாக நம்புகிறவள் என்கிறாய்? இந்தக் கடிதத்தைப் படிப்பதனால் அந்த நம்பிக்கை கெட்டுவிடப் போகிறதா! சும்மா படி, வாணி, ஒரு பெண்ணுக்கு எவ்வளவு அசட்டுத்தனம் இருக்க முடியும் என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு சரியான உதாரணம்.”அவன் கடிதத்தைப் பிரித்துத் திரும்பவும் அவள் கையில் கொடுத்தான்.

வேண்டா வெறுப்பாக அதை வாங்கிப் படித்தாள் வாணி.

"அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான நடன ஆசிரியர் தில்லைநாதர் அவர்களுக்கு; ஆசை வெட்கம் அறியாது என்று பழமொழி சொல்வார்கள். பலநாட்கள் பலமுறை வெட்கத்தை மீறிய ஆசையுடன் உங்களுக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். முடிவில் கடைசி விநாடியில் ஆசையை மீறி எழுந்த வெட்கத்தால் அவற்றை உங்களிடம் சேர்க்காமல் கிழித்துப் போட்டும் இருக்கிறேன். இதோ, இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேனே இந்தக் கடிதம்கூட அப்படி ஆனாலும் ஆகிவிடலாம். என் மனத்திலுள்ளதை வெளிப்படையாகத் திறந்து சொல்வதற்கு நான் ஏன் இவ்வளவு வெட்கப்பட வேண்டும் என்பதுதான் எனக்கே புரியவில்லை!

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து உங்களைக் கண்டிருக்கிறேன். என் மனத்தில் உங்களுக்கு ஒர் நிரந்தரமான இடம் ஏற்பட்டுவிட்டது. உங்களிடம் மாணவியாகச் சேர்ந்து நடனம் பயிலத் தொடங்குவதற்கு முன்பே அப்பாவோடு அவர் கலாசாலையைப் பார்வையிட வரும்போதெல்லாம் நானும் வந்திருக்கிறேன். கவர்ச்சிகரமான உங்கள் சுந்தரரூபம் அப்போதெல்லாம் என் மனத்தில் ஒருவிதமான குதுகுதுப்பை உண்டாக்கும். உண்மையைச் சொல்கிறேன். உங்களைப் பார்ப்பதற்காகவே நான் அப்பாவோடு வருவேன். அப்பாவிடம் பிடிவாதம் பிடித்து நடன வகுப்பில் சேர்ந்ததுகூட உங்களோடு பழகலாம் என்ற ஆசையால்தான். ஆசை வெள்ளத்திற்கு அணையாகப் போட்டு அடைத்து வைத்திருந்த வெட்கத்தை உடைத்து, இந்தக் கடிதத்தில் வார்த்தைகளாக வார்த்திருக்கிறேன். வாழ்க்கை என்ற அரங்கத்தில் என்றென்றும் உங்கள் மாணவியாகவே ஆடிக் கொண்டிருக்க விரும்புகிறேன். அந்தப் பாக்கியத்தைக் கவிகள் காதல் என்கிறார்கள் போலிருக்கிறது. கவிகள் சொல்கிற அது எதுவோ? அதை உங்கள்மேல் நான் கொண்டுவிட்டேன். என்னை நீங்கள்