பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



புறக்கணிக்கக்கூடாது. நான் கூடிய சீக்கிரம் அப்பாவிடமே சொல்லி, உங்களை என்னுடையவராக்கிக் கொண்டுவிடலாம் என்றிருக்கிறேன்.

உங்கள் அடியாள்,

நளினி”

கடிதத்தைப் படித்துவிட்டு வாணி தில்லையைத் திரும்பிப் பார்த்தாள்."இனிமேல் உங்களுக்கென்ன கவலை? ஐசுவரியமே உங்களைத் தேடி வருகிறது. கலாசாலையின் அதிபரே தம்முடைய ஒரே புதல்வியை மணந்து கொள்ளச் சொன்னால், வேண்டாம் என்றா மறுத்துவிடுவீர்கள்?"

“கனவில்கூட நினைக்காதே வாணி! இதோ! இந்தக் கடிதத்திற்கு நான் செய்யும் மரியாதையைப் பார்!” - அவள் கையிலிருந்த கடிதத்தைப் பறித்துச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து, அச்சன் ஒடையில் எறிந்தான் தில்லை. மல்லிகை அரும்புகளைத் துரவியதுபோல் நீர்ப்பரப்பில் கிழிந்த காகிதத் துணுக்குகள் மிதந்தன. “நன்றாக இருக்கிறது உங்கள் காரியம்! அதற்காகக் காகிதத்தை இப்படியா கிழிப்பார்கள்?.என்ன ஆத்திரம் உங்களுக்கு?.”

“காகிதத்திற்கு மட்டுமில்லை வாணீ! அவள் இதயத்தில் என்னைப் பற்றிக் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் இதே கதிதான் நேரப் போகிறது:”

"நான் அனாதை ஏழை! அன்பைத் தவிர வேறு எதையும் உங்களுக்குக் கொடுக்க முடியாதவள். அவளோ உங்களைக் கலைஞராக வளர்த்துக் கலைஞராக வாழ வைத்துக் கொண்டிருக்கும் வள்ளலின் மகள்!... எனக்காக உங்கள் வசதிகளை இழக்கக்கூடாது!”

"வாணீ! நம்மை ஒன்றுபடுத்துவதற்கு ஒரு புனிதமான சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொடுத்ததே, பவபூதியின் மகாகாவியம் - அதன் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்! என் உடலும் உள்ளமும் உன் ஒருத்திக்குத்தான் சொந்தம்.”

“வாணீ அவனை இமைக்காமல் பார்த்தாள். ஊடுருவும் அந்த விழிக்கூர்மை அவன் உடலைப் பார்த்ததோ? அல்லது உடல் வழியே உள்ளத்தைப் பார்த்ததோ?”

நேரமாகி விட்டதை உணர்ந்து இருவரும் எழுந்து நடந்தனர். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் இருவருடைய வழியும் நடையும் தனித்தனியே பிரிந்தன.

அந்த வருடம் வித்யாபவனம் கோடைவிடுமுறைக்காக மூடப்பட்டபோது தில்லைநாதன் வெளிநாடு சென்று திரும்ப வேண்டிய அவசியம் நேர்ந்தது. இந்தியாவிலிருந்து கலாசாரத் தூது கோஷ்டி ஒன்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டது. நந்தகுமாரின் பெருமுயற்சியால் நாட்டியக்கலையின் சார்பில் தில்லைநாதனுக்கும் அதில் ஓர் இடம் கிடைத்தது. தில்லைநாதன் அதற்கு ஆசைப்படவுமில்லை. அதை விரும்புவமில்லை. ஆனால், தம்முடைய கலாசாலையின் சார்பில் அவன் கண்டிப்பாகப் போய்த்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார் நந்தகுமார். அவனால் மறுக்க முடியவில்லை. அமெரிக்கா போக ஒப்புக் கொண்டான்.