பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வாழ்வில் நடவாதது ★ 145



‘வாணி என்ன சொல்வாளோ? என்று அஞ்சியே முதலில் அவன் நந்தகுமாரிடம் மறுத்துப் பார்த்தான். வாணியைத் தனியே சந்தித்தபோது, “மூன்று மாதச் சுற்றுப் பிரயாணம்தானே? நான் எப்படியும் இந்தப் பிரிவைப் பொறுத்துக் கொள்கிறேன். உங்களுக்குப் பேரும் புகழும் ஏற்பட்டால் அதில் எனக்கு மட்டும் பெருமையில்லையா? இங்கே ஒரு ஏழைப் பெண்ணின் இதயம் உங்களுக்காகத் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.இந்த அச்சன் ஓடையையும் இதன் பரிசுத்தமான தண்ணீரையும் போல என் ஆத்மாவை உங்களுக்காகச் சமர்ப்பிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.சந்தோஷமாகப் போய்வாருங்கள்” என்று உருக்கமாகவேண்டிக் கொண்டாள். இதனால் தான் அவன் நந்தகுமாரிடம் சம்மதம் தெரிவித்தான்.

ஆனால் நளினியும் நந்தகுமாருமாகச் சேர்ந்து செய்திருந்த அந்தரங்க ஆலோசனைகளை அவன் கண்டானா? பாவம்!

சென்னை வரை போய் அங்கிருந்து விமானத்தில் புறப்படுவதாக ஏற்பாடு. அங்கு போய்ச்சேர்ந்த மறுநாள்தான் அவனுடைய மதிப்பிற்குரிய பெரியவராக இருந்த அந்த நல்லமனிதர் நந்தகுமாருடைய சூழ்ச்சி அவனுக்குப் புரிந்தது. சென்னையில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் மாடி அறையில் அன்று இரவு அவர் அவனிடம் அதைக் கூறினார். அப்போது நளினியும் அவர் அருகில் இருந்தாள்.

“தில்லைநாதன், என்னிடம் நீ இன்றுவரை கொண்டிருக்கிற நன்றியின் அளவை மீறிய ஒர் விலையை இப்போது உன்னிடம் கேட்கப் போகிறேன்!”

“என்னை வளர்த்துக் கலைஞனாக்கிவிட்ட உங்களுக்கு எத்தகைய காரியத்தையும் செய்யக் கடமைப்பட்டவன் நான்!”

“ஆனால் இன்று நான் உன்னைச் செய்யச் சொல்லுகிற காரியத்தைக் கேட்டவுடன் நீ என்னைச் ‘சூழ்ச்சிக்காரன்’ என்று திட்டாமல் இருந்தால் அதுவே பெரிய காரியம்”

"நீங்கள் செய்கிற சூழ்ச்சி எதுவாக இருந்தாலும் அது நன்மைக்காகத்தான் இருக்கும்.”

“தில்லை! என்னுடைய இதயத்தின் அந்தரங்க வாயிலைத் திறந்து பேசுகிறேன். கோபித்துக் கொள்ளாதே! உனது எதிர்காலத்தின் பிரகாசமான நிலையை எதிர்பார்த்து, நீயே விரும்பாத சில திட்டங்களை நான் உனக்காக வகுத்திருக்கிறேன். இதுவரை உன்னிடம் அவற்றை மறைத்ததற்காக என்னை மன்னித்துவிடு. அத்தோடு என்மேல் நீ வைத்திருக்கும் நன்றி மெய்யானால் என் சொல்லைத் தட்டாதே.”

"சொல்லுங்கள்.”

“அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன் உனக்கும் நளினிக்கும் திருமணம் நடந்தாக வேண்டும். நீ மட்டும் அமெரிக்கா செல்ல எற்பாடு செய்திருப்பதாக உன்னிடம் முன்பு நான் கூறியது வெறும் பொய். வருகிற ஞாயிற்றுக்கிழமை உங்கள் திருமணத்திற்குக்கூட வடபழநியில் ஏற்பாடுகளையெல்லாம் தயாராகச் செய்து வைத்திருக்கிறேன்.”

நா.பா. 1 - 10