பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



ஒருநாள் மாலை நேரம் விதவையின் திலகமற்ற முகம் போல வானம் கதிரவனை இழந்து இருண்டு கொண்டிருந்தது. அடையாளம் தெரிந்து கொள்ள முடியாதபடி இளைத்துப் போன வாணி, அச்சன் ஒடைக்கரையில் உட்கார்ந்து வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தில்லைநாதன் தலைகுனிந்து பின் தொடர நந்தகுமார் அங்கே வந்தார். வாணியின் வெறித்த பார்வை கலையவில்லை. அவர்கள் வந்ததை அவள் கவனிக்காததுபோல் இருந்தாள்.

"வாணீ... அம்மா... உன்னைத்தான் கூப்பிடுகிறேன்!” நந்தகுமார் சிறு குழந்தையை அழைப்பதுபோல அவளை அழைத்தார். சலனம் அற்ற முகபாவத்தோடு அவர் பக்கம் மெளனமாகத் திரும்பினாள். தில்லைநாதன் தலையை இன்னும் அதிகமாகக் குனிந்து கொண்டான். அவன் கண்கள் அவளைக் காணக் கூசின.

"அம்மா! நீ பராசக்தி தெய்வம்! உனக்கு இழைத்த துரோகத்திற்கு விதி என்னைச் சரியானபடி தண்டித்துவிட்டது. இதோ இந்த இளங்கலைஞன் நிரபராதி; இவன்மேல் சந்தேகப்படாமல் இவனைப் பழையபடி ஏற்றுக்கொள்! உன்னைக் கைகூப்பி வணங்குகிறேன்!” என்றார் நந்தகுமார்.

“....”

பதில் இல்லை. அவள் விழிகள் அனல்கீற்றுக்களைப் போல மின்னின.

"அம்மா! நீ உத்தரராம சரித நாடகத்தில் இவரோடு நடிக்கவில்லையா? அதில் சோதனைக்குப் பின்பு ராமர் சீதையை ஏற்றுக்கொள்வது போல.”

நெருப்புத் துண்டத்தில் விழுந்த நெற்பொரிபோல அவள் விழிக் கடைகளில் உணர்ச்சி முத்துக்கள் திரண்டன.

"அம்மா! என் கலாசாலையும் இலட்சியங்களும் பாழ்போகாமல் வாழ வேண்டுமானால் இவரை ஏற்றுக்கொள்! மகாகவி பவபூதியின் வாக்கின்மேல் ஆணையாக ஏற்றுக் கொள்.”

அவளுடைய வலது கைச் சுட்டுவிரல் ஒடைக்கரையின் ஈரமணலில் ஏதோ அட்சரங்களைக் கிறுக்கியது. இருளில் பேசாமல் எழுந்து நடந்தாள் அவள். அவர்கள் மணற்பரப்பைப் பார்த்தனர்:

“காவியம், ஒவியத்துச் சந்திரன்! அதற்கு வளர்ச்சியும் தேய்வும் இல்லை. வாழ்வு பிரத்யட்சம்! அதனால் வளர்ச்சியும் தேய்வுமுண்டு. காவியத்தில் நடப்பதெல்லாம் வாழ்வில் நடக்க வேண்டுமென்பதில்லை. பவபூதிக்கு இன்னும் ஒரு உத்தரராம சரிதம் எழுத நான் வாய்ப்புக்கொடுக்கமாட்டேன்.”

மணலில் எழுதியிருந்ததை அவர்கள் படித்தனர். தொலைவில் பிரபஞ்சத்தின் இருள் வாணியை விழுங்கி மறைத்துக் கொண்டிருந்தது.

(ஆனந்த விகடன், டிசம்பர், 1957)