பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19. சீ! சீ! இந்தப் பழம்!

“அழகாக இருப்பது எப்படி? மற்றவர்களைக் கவருவது எப்படி? உங்களுடைய சருமத்தைக் காந்தி நிறைந்ததாகவும், மினுமினுப்பாகவும் எப்படி வைத்துக் கொள்வது? நீங்கள் சுருள் சுருளான அழகிய கேசத்தைப் பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?” என்று இந்த மாதிரியில் தொடங்கும் விளம்பரங்களையோ, புத்தகங்களையோ கவனிக்காத நாட்கள் இராமசாமியின் வாழ்க்கையில் ஏற்பட்டது இல்லை.

பத்திரிகைகளில் இந்தப் பாணியில் வெளிவருகிற விளம்பரங்களை அவன் ஒன்று விடாமல் கத்தரித்து, ஒரு ஆல்பமே தயாரித்து வைத்திருந்தான். கல்லூரிப் பாடப் புத்தகங்களுக்குக் கூட அவனுடைய புத்தக அலமாரியில் முதல் இடம் கிடையாது. இம்மாதிரி எப்படித் தலைப்போடு கூடிய புத்தகங்களுக்குத்தான் முதல் இடம்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அந்த இளமைப் பருவத்திலேயே, உடலைப் பேண வேண்டும், உடல் அழகினால் பிறரைக் கவர வேண்டும் என்று இராமசாமிக்கு அளவற்ற மோகம். அது ஒரு விடலைத் தனமான பருவம். அந்தப் பருவத்து உணர்ச்சிகளே தனிப்பட்டவை.

ஒரு நாளைக்கு நாற்பது தடவையாவது முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளா விட்டால் ஏதோ குறைந்து விட்டது போலத் தோன்றும். தலைக் கிராப்பை வாரிக் கொள்வதற்கு ஒரு சீப்பு எப்போதும் சட்டைப் பையிலேயே இருக்க வேண்டும். ஒரு மயிர் கலைந்து விட்டாலும் அழகே போய் விட்டது போலத் தோன்றும் பளபளப்பாக மின்னும்படி எண்ணெய் தடவி, நீரோடிய கருமணல் போல் அலை அலையாகப் படியும்படி வாரி விட்டுக் கொண்டால் தான் அவனுக்குத் திருப்தி

இராமசாமிக்கு இருபத்திரண்டாவது வயது. சரியான காளைப் பருவம், கவலை, அவலங்கள் இல்லாத மாணவ வாழ்க்கை. உல்லாசம் நிறைந்த எண்ணங்கள், உல்லாசம் நிறைந்த பேச்சுக்கள், உல்லாசம் நிறைந்த செயல்கள். அடுத்த வீட்டில் ஒரு அழகிய யுவதி, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களைச் சேர்த்து மகிழ வைக்கும் வயது. நடக்குமோ, நடக்காதோ - துணிவான அனுராக நினைவுகள் தோன்றி விடும். அவளும் அவன் படிக்கிற அதே கல்லூரியில் படிக்கும் மாணவிதான். அந்த வயதில் அந்தச் சூழ்நிலையில் இராமசாமிக்கு ஏற்பட்ட உற்சாகத்துக்கும், உல்லாசத்துக்கும் இந்தப் பெண் ஒரு வகையில் முழுக்க முழுக்கக் காரணம் என்று சொல்ல வேண்டும். அந்தப் பெண்ணின் கண்களின் பார்வை ஒரு கணம் தன் மேல்நிலைக்கலாகாதா? என்று அவன் ஏங்கிய நாட்கள் எத்தனை? அவளோடு இரண்டொரு விநாடிகள் பேசுவதற்கு முயன்று அது முடியாமல் ஏமாற்றமடைந்த தோல்விகள் எத்தனை?