பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



வசியத் தாயத்து, வசிய மோதிரம், ‘இப்னாடிஸம்’ என்று இந்த உலகத்தில் செயற்கைக் காதல் முறையின் தளவாடங்களாகப் பத்திரிகைகளில் விளம்பரமாகும் சகலவிதமான சாதனங்களையும் பிரயோகித்த பின்னரும், அந்த மயில் இந்தக் கட்டிளங் காளையின் பக்கமாகப் பார்வையைச் சாய்க்கவில்லை. இராமசாமிக்கு ஏமாற்றம் சாதாரண ஏமாற்றமா? நூற்றுக்கு நூறு சதவிகித ஏமாற்றம்.

‘ஆகா! இது என்ன அநியாம் நிறைந்த உலகம்? படிப்புத்தான் வரமாட்டேனென்கிறது. பரீட்சைகளும் எத்தனை தரம் எழுதினாலும் பாஸ் ஆவதில்லை. பத்திரிகைகளுக்குக் கதை கட்டுரைகள் எழுதலாம் என்றால் அவர்கள் ‘நன்றாயில்லை’ என்ற ஒரு காரணத்துக்காகத் திருப்பியனுப்பி விடுகிறார்கள். என்ன அக்கிரமம்? ‘நன்றாயில்லை’ என்பதற்காக ஒரு கதையைத் திருப்பியனுப்புவதாவது? இப்போதெல்லாம் தான் நன்றாயிருக்கிற எதுவுமே பத்திரிகையில் வருவதில்லையே! என் கதையைப் பிரசுரிக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுவதே, அது ‘நன்றாயில்லை’ என்ற ஒரே தகுதிக்காகத்தானே? சரி. இதெல்லாம் போகிறது.நம்மால் முடியாத காரியங்கள். கடைசி முயற்சியாக இந்தப் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கொஞ்சம் காதலித்துப் பார்க்கலாம் என்றால் அதிலுமா இவ்வளவு தொல்லைகள்!' என்று தனக்குத்தானே எண்ணி ஏங்கிக் குமுறுவான் இராமசாமி.

கல்லூரியிலிருந்து வீடு திரும்பும்போது பஸ்ஸில் தான் நின்றுகொண்டு, அவளுக்கு எத்தனையோ நாட்கள் உட்கார இடம் கொடுத்திருக்கிறான். ‘சரி! இப்படி உட்கார இடம் மட்டும் கொடுத்தால் இவள் நம்மோடு பேசுவதற்கு வாய்ப்பில்லை; நினைவில்லாமல் போட்டுவிட்டு எழுந்திருப்பது போல் பஸ்ஸில் உட்காருமிடத்தில் நம் கைக்குட்டையைப் போட்டுவிட்டு எழுந்திருப்போம். "மிஸ்டர்! இந்தாருங்கள் உங்கள் கைக்குட்டை” என்று அப்போதாவது இரண்டு வார்த்தை இவள் சொல்லித்தானே ஆக வேண்டும்!” என்து எண்ணித் திட்டமிட்டவனாக மறுநாள் அவளுக்கு இடம் கொடுப்பது போல் கைக்குட்டையையும் அந்த இடத்தில் வைத்துவிட்டு எழுந்தான்.

ஆனால் அந்தப் பெண்புலி அவன் எண்ணியதற்கு நேர்மாறான காரியத்தைச் செய்துவிட்டது. விறுவிறு வென்று அந்தக் கைக்குட்டையை ஸீட்டிலிருந்து எடுத்துச் சுருட்டிப் பஸ்ஸுக்கு வெளியே ரோட்டில் வீசி எறிந்துவிட்டாள். இராமசாமியின் தன்மானம் கொதித்து எழுந்தது. அவள் தன்னுடைய உள்ளத்தையே அந்த மாதிரி அலட்சியமாகச் சுருட்டிஓடுகிற பஸ்ஸிலிருந்து நடுரோட்டில் விசிறிவிட்டதுபோலத் துடித்தான் அவன்.அத்தனை பேர் இருக்கிற பஸ்ஸில் அவளை என்ன செய்ய முடியும்? திருடனுக்குத் தேள் கொட்டினாற் போலத் தவிக்கும் நிலை அவனுடையதாயிருந்தது.

அடாடா அந்தப் பெண்ணிண் பெயரை இதுவரை சொல்லவே இல்லையே! ‘நளினி’ என்ற நளினமான பெயர் அவளுக்கு. மயிலேறும் பெருமாள் தெருவில் தொண்ணுாற்றொன்பதாம் நெம்பர் வீடு நம்முடைய கதாநாயகனான இராமசாமியினுடையது. நூறாம் நெம்பர் வீடு கதாநாயகியாவதற்குத் தயங்குகின்ற அல்லது மறுக்கின்ற நளினியினுடையது.