பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / சீ! சீ! இந்தப் பழம் ★ 151



தொண்ணுாற்றொன்பதாம் நெம்பர் வீட்டுக்கும், நூறாம் நெம்பர் வீட்டுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தன. உதாரணமாகத் தொண்ணுற்றொன்பதாம் வீட்டுக்குப் பால் விடுகிற தீர்த்தவாரியா பிள்ளை (இது காரணப் பெயர்) தான் நூறாம் நெம்பருக்கும் வாடிக்கைப் பால்காரர். இரண்டு வீடுகளுக்கும் வாசல் பெருக்கிக் கோலம்போடும் வேலைக்காரி ஒருத்தி. இரண்டு வீடுகளுக்கும் தபால் கொண்டு வரும் தபால்காரன் ஒருவனே! இரண்டு வீடுகளிலும் ‘செய்திக் குழப்பம்’ - என்ற ஒரே தினசரி பத்திரிகையைத்தான் வாங்குகிறார்கள். இப்படி இவ்வளவு ஒற்றுமைகள் இருந்தும் இந்த வீட்டில் இருக்கின்ற ஒரு பையன் அந்த வீட்டில் இருக்கின்ற ஒரு பெண்ணைக் காதலிக்க முடியாமல் இருந்தால் அதை என்னென்பது? இராமசாமியின் வருத்தத்தில் நியாயமிருக்கிறதா? இல்லையா? என்று இப்போது நீங்கள் சொல்லுங்கள்."என்னடா இராமசாமி, உன்னுடைய முயற்சிகள் எப்படி இருக்கின்றன?” என்று அந்தரங்கமான மாணவ நண்பர்கள் கிண்டலாக விசாரித்தால் “தொண்ணுாற்றொன்பதுக்கும் நூறுக்கும் நடுவில் ‘மைனஸ்’ ஒன்று” என்று கணித ரீதியாக ஏக்கத்தோடு பதில் சொல்வான் அவன் ‘அல்ஜீப்ரா’ கணக்கின்படி வேண்டுமானால் 'மைனஸூம் மைனஸும்’ பிளஸ் ஆக இருக்கலாம்! ஆனால் காதலால் வெயில் காலத்துத் தார் ரோடு போல் உருகிக் கொண்டிருக்கும் இராமசாமிக்கு ‘அல்ஜீப்ரா’ எக்கேடு கெட்டுப் போனால் தான் என்ன?

ஒருநாள் தொண்ணுற்றொன்பதாம் நெம்பர் வீட்டுக் கதாநாயகனும், கதாநாயகியாக விரும்பாத நூறாம் நம்பர் வீட்டுத் திருமதியும் கல்லூரிக்குப் போவதற்காக ஒரே பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாகத் திடீரென்று மழை தூறத் தொடங்கிவிட்டது. முன் ஜாக்கிரதையாகக் குடை கொண்டு வந்திருந்த தொண்ணுாற்றொன்பதாம் நெம்பர், இத்தகைய அரும்பெரும் வாய்ப்பை நழுவவிடாமல் குடையை விரித்து, "மழையில் நனைகிறீர்களே! பஸ் வருகிறவரை இப்படிக் குடையில் நிற்கலாமா” என்று கெஞ்சும் குரலில் திருமதி நூறாம் நம்பரை அழைத்தது.

'இந்தத் தடியன் இப்படித் துணிந்து நம்மை அழைப்பதாவது?’ என்று உள்ளூர ஆத்திரமடைந்த நூறாம் நம்பர், குறும்புத்தனமான முறையில் இராமசாமியின் அனுதாபத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பியது.

பதில் பேசாமல் எட்டி நின்றபடியே அவனிடமிருந்து குடையை வாங்கித் தான் மட்டும் நனைந்துவிடாதபடி பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டாள் அவள். தன் இதய தேவதைக்கு உதவி செய்ய முடிந்த பெருமையோடு மழையில் தெப்பமாக நனைந்து கொண்டு நின்றான் இராமசாமி. அவனை சொட்டச் சொட்ட நனைய வைத்த பிறகு ‘நன்றி’ என்று வாயைத் திறந்து ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் குடையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பஸ் ஏறிப் போய்ச் சேர்ந்தாள் அவள்.

காதற் போர்க் களத்தில் இரண்டாவது முஸ்தீபும் தோல்வி அடைந்துவிட்டது. அந்தோ! பரிதாபம். ஆனால் இராமசாமி முயற்சி வீரன். ‘அருமை உடைத்தென்று அகாவாமை (மலையாதிருத்தல்) வேண்டும்’ - என்பது போன்ற மணிமொழிகளை