பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



எல்லாம் படித்தவனாயிற்றே அவன்! ‘ஊக்கமது கைவிடேல்’ என்று ஒளவையார் தனக்காகவே சொல்லியிருப்பதாக எண்ணிக்கொண்டான் அவன். மூன்றாவது முஸ்தீபாகப் புதுமையான முறையில் ஏதாவது செய்ய வேண்டுமென்று எண்ணினான்.

‘ஏ! முட்டாள் மூளையே! உனக்கு இதுவரை இந்த யோசனை ஏன் தோன்றாமல் போய்விட்டது? ஒரு காதல் கடிதம்கூட எழுதாமல் காதலில் வெற்றி கிடைக்கவில்லையே என்று எண்ணி ஏங்குவது எவ்வளவு பெரிய பேதைமை? இன்றைக்கே ஒரு காதல் கடிதம் எழுதிவிடுகிறேன்.ஒரு பெண்ணின் உள்ளத்தை உருக்க வேண்டுமென்றால் அது இலேசான காரியமா? எழுத்தின் மூலமாகத்தான் உருக்க முடியும் போலிருக்கிறது’ என்று சிந்தித்து, எதுகை, மோனைகளோடு ஒரு காதல் கடிதம் எழுதிவிடுவதென்று உட்கார்ந்தான். வசனத்தில் எழுதப்போக நளினியின் மேல் அவனுக்கிருந்த அளவற்ற காதலின் வேகத்தால் அது கவிதையாகவே பிறந்து தொலைத்துவிட்டது!

"இச்சைக்கினியாளே - பச்சைக் கிளியாளே - கொச்சை மொழியாளே - பச்சையாகவே சொல்லிவிடுவேன் பாவையுனைப் பாவி நான் காதலிக்கிறேன் - சொச்சம் நாளைக்குச் சொல்லுகிறேன். சுகத்துக்கு மறு கடிதம் போட்டு விடு”

இந்த வரிகளை எழுதி முடித்தவுடன் இராமசாமி துள்ளிக் குதித்தான்."எனக்கும் கவிதை வருகிறது: ஆகா! என்ன எதுகை? என்ன மோனை?” என்று தன்னைத் தானே ஆத்மார்த்தமாகப் பாராட்டிக் கொண்டான்.

அந்தக் கடிதத்தை நேரில் கொடுப்பதோ, ஜன்னல் வழியாகப் பக்கத்து வீட்டுக்குள் வீசி எறிவதோ நேர்மையல்ல. (இராமசாமி காதலில் நேர்மை தெரிந்தவன் பாருங்கள்!) என்று எண்ணித் தபாலில் ஒட்டிப் போட்டான். மறுநாள் மாலை பதில் கவரும் தபாலிலேயே வந்து சேர்ந்தது. இராமசாமி மகிழ்ச்சியோடு அதைப் பிரித்தான். ஏதோ ஒரு பத்திரிகையிலிருந்து கத்தரித்து எடுத்த கொரில்லா - குரங்கின் படம் ஒன்று கவருக்குள் இருந்தது. அவமானம்! அவமானம்! இராமசாமிக்குத் தாங்க முடியாத அவமானம் வந்த ஆத்திரத்தில் அந்தக் கணமே படத்தையும் உறையையும் நெருப்பை வைத்துக் கொளுத்தினான்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நூறாம் நெம்பர் வீட்டு நளினியைக் காதலிக்கும் முயற்சியை அறவே கை விட்டு விட்டுப் படிப்பில் கவனத்தைச் செலுத்தினான் இராமசாமி. அவனுடைய போக்கே மாறிக் கொண்டு வந்தது. ‘படிப்பு வீசை என்ன விலை?’ என்று கேட்டுக் கொண்டிருந்தவன், ‘இந்த உலகத்தில் படிப்பைத் தவிர வேறெதுவுமே இல்லை’ என்று எண்ணத் தொடங்கி விட்டவனைப் போல எப்போதுமே புத்தகமும் கையுமாக வீட்டிற்குள் அடைந்து கிடந்தான். ஏதாவதொரு பயனற்ற முயற்சியில் அவமானப்பட்ட பிறகுதான் மனிதனுக்கு நல்லதில் அக்கறை ஏற்படுமென்பார்களே; அது அவன் விஷயத்தில் உண்மையாகிவிட்டது.

மார்ச் பரீட்சைக்கு இன்னும் இரண்டு மூன்று மாதங்களே இருந்தன. பூர்வாங்கமாக நடத்தப்பட்ட ‘செலக்ஷன்’ பரீட்சையில் கணிதத்தில் இராமசாமி