பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / சீ! சீ! இந்தப் பழம் ★ 153



கல்லூரியிலேயே முதல் மார்க் வாங்கிவிட்டான். மற்றப் பாடங்களிலும் தரமான தேர்ச்சி. பழைய இராமசாமியின் உடலுக்குள் புதிய சக்தி ஏதாவது நுழைந்துவிட்டதோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் உண்டாகிவிட்டது. மாறுதல் என்றால் முற்றிலும் மாறுதல்."அழகாக இருப்பது எப்படி?” போன்ற ‘எப்படி’ பாணிப் புத்தகங்களைப் படிக்கும் அசட்டுத்தனம் முதல் சகல அசட்டுத்தனங்களும் ஒவ்வொன்றாக அவனிடமிருந்து கழன்று சென்றுவிட்டன. படிப்பைத் தவிர வேறு எதையும் கவனிக்காத ‘படிப்பு வெறி’ அவனிடம் உண்டாகியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

மார்ச் மாதத்தில் வெய்யிலின் கொடுமை அதிகமாக இருந்தது. ஊரில் அங்கங்கே அம்மை, வைசூரி பரவியிருந்த சமயம், பரீட்சைக்கு நாலுநாள் இருக்கும்போது இராமசாமிக்கு வைசூரி போட்டுவிட்டது. உடம்பு முழுவதும் ஊசி குத்த இடமின்றி அரிநெல்லிகாயாக முத்துக்கள் வெடித்திருந்தன. முகத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை. கொப்புளங்கள் கோரமாக்கியிருந்தன. அசையாமல் ஒரே இடத்தில் படுத்துக்கிடந்தான். சுற்றி வேப்பிலையைத் தூவியிருந்தார்கள். உடம்பில் கொப்புளங்கள் உறுத்தக்கூடாதென்று தலைவாழை மரத்தின் மெல்லிய குருத்து இலையில் விளக்கெண்ணையைத் தடவி விரித்து அதில் படுக்கவிட்டிருந்தார்கள்.

நாலுநாட்களாகப் பரீட்சை தொடங்கி நடந்து கொண்டிருந்தது. மெடிகல் 'சர்டிபிகேட்’ வாங்கிக் கொடுத்துவிட்டு அவன், பரீட்சைக்குப் போகாமல் இருந்துவிட்டான்.

அன்று கணக்குப் பரீட்சை காலை எட்டு, எட்டரை மணி சுமாருக்கு நளினியின் தம்பி, இராமசாமி படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான்.

"மாமா! மாமா!"-இமைக் கொப்புளம் உறுத்தாமல் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்த இராமசாமி கண்ணை விழித்துப் பார்த்தான். நளினியின் தம்பி கையில் எதையோ ஒளித்து மறைத்துக் கொண்டு நின்றான்."என்னடா அது?”

"அக்கா உங்களிடம் கொடுத்துப் பதில் வாங்கிக் கொண்டு வரச் சொன்னாள்” என்று சொல்லிக் கொண்டேதன் கையில் மடித்து வைத்துக்கொண்டிருந்த கடிதத்தை இராமசாமியிடம் நீட்டினான் பையன். இராமசாமி படுக்கையில் சாய்ந்தபடியே அலட்சியமாக ஒரு கையை நீட்டி வாங்கினான். பிரித்துப் படித்தான்.

"பத்து மணிக்குக் கணக்குப்பரீட்சை,இன்னும் இரண்டுமணிநேரமே இருக்கிறது. சில கணக்குகள் எனக்கு விளங்கவே இல்லை. இப்போது உங்களிடம் வந்தால் சொல்லிக் கொடுக்க அவகாசப்படுமா? பழைய சம்பவங்களை நினைத்து என் மேல் கோபித்துக் கொண்டு முடியாது என்று சொல்லி அனுப்பி விடாதீர்கள்! அப்போது உங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போனேன்.இப்போது...! தெரிந்து கொண்டநளினி.”

படித்து முடித்ததும் தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டான் அவன். "அப்போது உங்களைப்புரிந்து கொள்ள முடியாமல் போனேன், இப்போது...!” என்று