பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



வார்த்தை எழுதாமல் இடைவெளியாக விட்டிருக்கும் இடத்திற்கு எவ்வளவு அர்த்தம் இருக்கிறதென்று நினைத்தபோது அவனுக்கு உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஒரே ஒரு கணம்தான் அது நிலைத்தது. அதையடுத்து இனம் புரியாத ஒருவகை அருவருப்பு. “பார்க்க வருகிறாளாம் பார்க்க! பார்க்க விளங்காத உடம்போடு வைசூரி போட்டிருக்கிறபோது நீ பார்க்க வரவில்லை என்றுதான் குறை” தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் அவன்.

“இந்தா, இந்த நோட்டை உன் அக்காவிடம் கொண்டு போய்க் கொடு, இதில் எல்லாக் கணக்குகளுக்கும், அவைகளைப் போடும் விதம் அடங்கியிருக்கின்றன. பார்த்துப் படித்துக் கொள்ளச் சொல் என்னைப் பார்க்க இப்போது இங்கே வரவேண்டாம் தெரிந்ததா? போய்ச்சொல்லிவிடு!” இராமசாமியின் குரலில் கண்டிப்பு ஒலித்தது. பையன் நோட்டைப் பெற்றுக்கொண்டு போனான்.

கூடத்தில் இரண்டாவது வகுப்பு படிக்கும் இராமசாமியின் தம்பி தன் பாடப்புத்தகத்திலிருந்து இரைந்து படித்துக்கொண்டிருந்தான். “நரி தன்னால் ஆன மட்டிலும் முயன்று பார்த்தது; திராட்சைக் குலை அதற்கு எட்டவே இல்லை. உடனே திராட்சைக்குலை கிடைக்காததால் ஏமாற்றமடைந்த நரி,"சீ!சீ! இந்தப்பழம் புளிக்கும்’ என்று சொல்லிக் கொண்டே போய்விட்டது!”

இராமசாமிக்காகவே தம்பி அந்த வரிகளைப் படித்தானா?

படுக்கையில் இருந்தே கேட்டுக் கொண்டிருந்த இராமசாமி சிரித்துக் கொண்டான். “ஆசை நிறைவேறினால் மகிழ்ச்சி. நிறைவேறாவிட்டால் அந்த ஏமாற்றத்தை மறைக்க ஒரு வேதாந்தம். எந்த வகையில் பார்த்தாலும் மனிதன் கெட்டிக்காரத்தனமாக எதையும் சமாளிக்கப் பழகியிருக்கிறான்” என்று அவன் வாய் முணுமுணுத்தது.

(ஆனந்த விகடன், பிப்ரவரி, 1957)