பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20. கற்பனையேயானாலும்...

யிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் ஆண்டு என்று நினைக்கிறேன்; நானும் வேறொரு தமிழ் எழுத்தாள நண்பரும் லட்ச தீப உற்சவத்திற்காகத் திருவனந்தபுரம் போயிருந்தோம். லட்ச தீபம் முடிந்த மறுதினம் பல இடங்களைச் சுற்றிப் பார்க்கத் தீர்மானித்தோம். முதல் முதலாக நாங்கள் பார்க்கக் கிளம்பிய இடம் ‘கோவளம்’ என்ற கடற்கரைச் சிற்றூர்.இயற்கைக் காட்சிகள் நிரம்பிய இடம். நானும் நண்பரும் ஒரு டாக்ஸி பிடித்து அந்த இடத்திற்குக் கிளம்பினோம்.

டாக்ஸி டிரைவர் கோவளத்திற்கு ஒரு மைல் முன்பே டாக்ஸியை நிறுத்தி, இறக்கி விட்டான். காரணம் வேறொன்றும் இல்லை. அந்த இடத்தோடு ரோடு முடிந்திருந்தது.அதற்கு மேல் ஒரு மைல் தூரம் தென்னைமரச் சோலைகளுக்கிடையே ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இறங்கி நடந்தோம். தென்னை, பலா என்று கண்ணுக்கு எட்டிய தூரம் பசுமரக் கூட்டம். அவற்றினிடையே மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்யப்பட்டிருந்தது. மிளகுக் கொடி புதர் மண்டிப் படர்ந்திருந்தது. இடையிடையே வீடுகளும் தென்பட்டன. பொழுது புலர்ந்தும் புலராமலும் இருக்கின்ற கருக்கிருட்டு நேரத்தில் நாங்கள் போயிருந்தோம். காற்றும் ஜில்லென்று உடலை நனைப்பது போல் இருந்தது. ‘கீகீ’ என்ற சிள்வண்டுகளின் ஒசை அடங்கவில்லை.

“மனிதன் வசித்தால் இந்த மாதிரி இடத்தில் வசிக்க வேண்டும், ஐயா” என்றார் நண்பர்.

“போக பூமி, சுவர்க்கம், அது, இது என்று சொல்கிறார்களே; அவையெல்லாம் இதற்கு உறை போடக் காணுமா?” என்று அதை ஆமோதித்தேன். பேசிக் கொண்டே நடந்ததில் நடை தெரியவில்லை. கடற்கரையில் வந்து நின்றோம். பி.டபிள்யூ. இலாகாவால் அமைக்கப்பட்ட ஸ்நான கட்டடம் ஒன்று இருந்தது.அதை அடுத்து ஒரு சிறு குன்று. அந்தக் குன்றில் ஒரு வேடிக்கை. ஒவ்வோர் இடத்திலும் பாறை ஒவ்வொரு நிறமாக இருந்தது. பாறைகளுக்கிடையே இருந்த மண் இடைவெளியில் தென்னை மரங்கள் வளர்ந்திருந்தன. குன்றின் அடிவாரத்தில் கடல் அலைகள் மோதிக் கொண்டிருந்தன. -

கடல்ஒலியையும் மரங்கள் காற்றில் ஆடும் ஒலியையும் தவிர வேறு சந்தடி இல்லை. அன்று காலையில் அந்தப் பிரதேசத்தில் முதல் முதலாகப் பட்ட மனிதக் காலடிகள் எங்களுடையனவாகத்தான் இருக்க வேண்டும். சந்தடியின்றிக் கண்ணுக்கு எட்டிய தூரம் கரையில் வேறு மனித வாடையே தென்படாமல் இருந்தது. எங்களைப் போல்