பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

கற்பனை மனப்பான்மை இல்லாத வேறு எவராவது அன்று அந்த நேரத்தில் அங்கே வந்திருந்தால் பயந்து உடனே திரும்பியிருக்க நேரிடும். தனிமை என்றால் அப்படி இப்படி என்று சாதாரணமாகச் சொல்லிவிடக்கூடிய தனிமை இல்லை. நூற்றுக்கு நூறு தனிமை நண்பர் குன்றில் ஏறத் தொடங்கினார். நானும் அவரைப் பின்பற்றி ஏறினேன். சிறிது தொலைவுதான் ஏறியிருப்போம்.

திடீரென்று முன்னே சென்ற நண்பர் திடுக்கிட்டு நின்றார். எதிரே பேயைக் கண்டுவிட்டவர் போல் பயங்கரமான குரலில் ‘ஆ!’ என்று அலறினார்.

“என்ன, என்ன? ஏதாவது பாம்பு?...”அவர் பதில் சொல்லவில்லை. வாய் குழறியது. அவர் உடல் கீழே விழுந்து விடுவதுபோல ‘வெடவெட’ வென்று நடுங்கியது. வேகமாகத் திரும்பினார். அவர் முகத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை. வாய் பேச வராததனால் கைகளால், ‘பேசாமல் திரும்பிவிடுங்கள்’ என்று கூறுகிற பாவனையில் எனக்கு ஜாடை காட்டினார். பயத்தினால் அகன்றிருந்த அவர் விழிகளையும் முகத்தையும் கண்டு எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன சார்? என்ன? எதுவாகத்தான் இருக்கட்டுமே; இப்படியா உதறுவார்கள்? வழியை விடும், ஐயா! நான் பார்க்கிறேன்” என்று சூரப்புலி போல் அவரை விலக்கித் தள்ளிக் கொண்டு முன்னே பாய்ந்தேன் நான்.அடுத்த கணம் என் வாயிலிருந்தும் அதே அலறல் கிளம்பியது.எதிரே கண்ட காட்சி மயிர் சிலிர்க்கச் செய்தது. செய்வதென்ன என்று தெரியாமல் அப்படியே மலைத்துப் போய் நின்றுவிட்டேன். நண்பராவது கை ஜாடை செய்கிற அளவிற்குச் சுயநினைவு பெற்றிருந்தார். எனக்கோ உடம்பு முழுவதுமே மரத்துப் போய் நின்றுவிட்டது.

எதிரே இருந்த பாறை இடுக்கில் ஒரு தென்னை மரம். அதன் அடியில் கயிறு கட்டி இரண்டுபேர் தூக்கிட்டுக் கொண்டிருந்தனர். ஒன்று பெண்ணின் உடல்; மற்றொன்று ஆணின் உடல். இருவருக்குமே வாலிப வயசு என்று அனுமானிக்க முடிந்தது. தென்னை மரத்தின் அடிப்பாகம் ‘டா’னாப் பாடாக வளைந்திருந்ததனால் தூக்கிட்டுக் கொண்டு பாறையின் இடைவெளியில் தொங்க வசதியாக இருந்தது. தோற்றத்தையும் அணிந்திருந்த உடை முதலியவற்றையும் பார்த்தால் படிப்பும் பணவசதியும் உள்ள குடும்பத்து ஆட்களாகத் தோன்றியது.

எவ்வளவு தேரந்தான் தானும் நண்பரும் அப்படி மலைத்துப் போய் நின்றோமோ? உடலில் மெல்லத் தைரியமும் நினைவும் வந்தபோது, ‘தப்பினோம் பிழைத்தோம்’ என்று ஓட்டமெடுத்தோம். திரும்பிப் பார்க்கவே இல்லை. யாராவது ஆளோ, போலிசோ நாங்கள் நின்றுகொண்டிருப்பதையும் மரத்தடிக் காட்சியையும் சேர்த்து ஒருங்கு கண்டுவிட்டால் சாட்சி விசாரணை என்று எதிலாவது மாட்டிக் கொள்ள நேரிடுமே என்று பயம் ஒருபுறம்; உள்ளத்தை நடுங்கச் செய்யும் காட்சியின் கோரம் ஒருபுறம்; இரண்டுமாகச் சேர்த்து எங்களை ஓட ஓட விரட்டின.

“கோவளமுமாயிற்று! இயற்கைக் காட்சியுமாயிற்று! இன்றைக்குப் பொழுது நமக்கு நன்றாக விடியவில்லை. பேசாமல் வந்த சுவடு தெரியாமல் திரும்பிப்