பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————————முதல் தொகுதி / கற்பனையேயானாலும்... ★ 159


“இப்பொழுதே கருத்து உருவாகிறது; எழுதினால் ஜோராக வரும்!” நண்பர் காகிதக் கற்றையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு மேஜையருகே சென்றார்.

“ஜமாய்த்துத் தள்ளும். நான் நிம்மதியாக ஒரு தூக்கம் போடுகிறேன்” என்று சொல்லிவிட்டுத் தூக்கத்தில் ஆழ்ந்தேன். நல்ல தூக்கம் வருகிறவரை ‘கிர்கிர்’ என்று எழுதும் ஒலியும் ‘பரட் பரட்’ என்று காகிதம் கிழிபடுகிற ஒசையும் சிறிதுநேரம் செவிகளில் விழுந்து கொண்டிருந்தன. பின்பு நினைவிழந்து துயிலின் வசப்பட்டுவிட்டதால் எனக்கு ஒன்றும் தெரியாது.

மூன்று மூன்றரை மணிக்கு நண்பர் எழுப்பவே தூக்கம் கலைந்து எழுந்தேன்.

“போய் முகம் கழுவிக் கொண்டு வாரும். ஹோட்டல் பையன் காபி, சிற்றுண்டி கொண்டுவரக் கீழே போய் இருக்கிறான்.” நான் போய் முகம் கழுவிக் கொண்டு வந்தேன்.

சிற்றுண்டி சாப்பிட்டு முடிந்ததும், “இதோ எழுதி முடித்துவிட்டேன். படித்துப் பார்த்து அபிப்பிராயம் சொல்லும்.அதற்குள் வெளியே வெயிலும் தணிந்துவிடும்.நாம் சுற்றுவதற்குக் கிளம்பலாம்” என்று சொல்லியவாறே என் கையில் ஒரு கையெழுத்துப் பிரதியைக் கொடுத்தார். நண்பரின் கதையைப் படிக்கத் தொடங்கினேன்.

முடிந்த காதல்

(கதையின் முதல் மூன்று பக்கங்களும் கோவளம் கடற்கரையைப் பற்றிய வருணனையாகவே இருப்பதால் அதை இங்கேயிருந்து நீக்கி எஞ்சியதை மட்டும் தருகிறேன்).

அம்முவும் பாஸ்கரனும் நேரம் போவதே தெரியாமல் குன்றின்மேல் உட்கார்ந்து கடலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சுற்றுப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக இருள ஆரம்பித்தது. கரையில் செம்படவர்களின் கட்டு மரங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பிவிட்டன. மீன் கூடைகளோடு அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கடல் ஓசையும் தென்னை மட்டைகள் காற்றில் உரசும் சப்தமும் தவிர வேறு பேச்சுக் குரல் இல்லை. அம்முவின் செம்பவள இதழ்கள் மெல்லத் திறந்தன.

“பாஸ்கர், நேரமாகிவிட்டதே நாம் ஊர் திரும்ப வேண்டாமா?”

“அம்மு, ஏன் இவ்வளவு அவசரப்படுகிறாய்? இந்தத் தனிமையையும், இதன் இன்பங்களையும் இன்னும் சிறிது நேரந்தான் அனுபவித்து விட்டுப் போவோமே!”

“அதற்கில்லை, பாஸ்கர்! கடைசிப் பஸ்ஸும் போய்விட்டால் எட்டு மைல் நடந்தா போக முடியும்?”

“நடந்துவிட்டால்தான் என்ன? என்னோடு நீயும் உன்னோடு நானும் உடன்வரும்போது எட்டு மைல் என்ன? எண்பது மைல்கூட நடக்கலாமே!” அவன் பேச்சைக் கேட்டு அம்மு சிரித்தாள். அந்தக் கவர்ச்சி நிறைந்த புன்னகையின் அழகில் பாஸ்கரன் அப்படியே சொக்கிப் போனான். மலரைக் காட்டிலும் மென்மையான