பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

அவள் பட்டுக் கரத்தைத் தன் கரத்தோடு இணைத்துக் கொண்டு, “அம்மு , ‘பார்பரியோ’வின் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று இனிய குரலில் கேட்டான் பாஸ்கரன்.

“பார்பரியோவா? அப்படி என்றால்... யார்? எனக்குத் தெரியாதே!”

“சொல்கிறேன், கேள். அவள் ஒரு காவிய நாயகி. ஆங்கிலத்தில் காதலர்களைப் பற்றிப் படித்திருந்தால் பார்பரியோவைத் தெரிந்திருக்கும்!”

“என்ன செய்தாள் அவள், அவ்வளவு புகழ்பெற?”

“முடிவு இல்லாத இன்பத்தைக் காதலர்கள் அனுபவிக்க வேண்டுமென்றால் பரிபூரணமான மகிழ்ச்சி ஒன்றிற்குப் பின் தொடர்ந்து வாழக்கூடாது. அந்த மகிழ்ச்சியின் போதே இறந்துவிடவேண்டும்’ என்பது பார்பரியோவின் கொள்கை”

“...ஊம்! அப்புறம்” அம்மு அதைக் கேட்டுவிட்டு ஒய்யாரமாகத் தலையை அசைத்தாள்.

“ஒருநாள்தன் காதலன் தன்னைத் தழுவிக்கொண்டிருக்கும்போதே தன் கூந்தலால் தனது கழுத்தையும் அவன் கழுத்தையும் சேர்த்துச் சுருக்கிட்டுக் கொண்டாள் பார்பரியோ. இருவருமே ஏக காலத்தில் அமரத்துவம் அடைந்தனர். இதுதான் பார்பரியோவின் கதை.”

பாஸ்கரன் கூறி முடித்ததும் அம்மு குறும்புதனமான நகைத்துக் கொண்டே, “பாஸ்கர், நானும் அப்படிச் செய்து விடட்டுமா?” என்றாள்.

“சீ குறும்புக்காரி உதாரணத்திற்குச் சொல்ல வந்தால்.” என்று செல்லமாக அவள் கன்னத்தைத் தட்டினான் பாஸ்கரன்.

அப்போது குன்றின்மேல் யாரோ திடுதிடுவென்று நாலைந்து பேர் ஓடிவரும் ஓசை கேடடது. இருளில் ஒன்றுமே தெரியவில்லை. பாஸ்கரனும் அம்முவும் திடுக்கிட்டு எழுந்து நின்றனர்.

இதுவரைதான் நண்பரின் கதையை நான் படிக்க முடிந்தது.இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் உட்கார்ந்திருந்த அறையின் கதவு வெளிப்புறம் ‘தடதட’வென்று தட்டப்பட்டது. வழுவழுவென்று போய்க் கொண்டிருந்த கதையில் விறுவிறுப்புத் தட்டும் சமயத்தில் சிவபூஜை நடுவே கரடி பிரவேசித்தது போல் யாரோ வந்துவிட்டார்களே! என்று எண்ணிக் கொண்டு கதையின் பிரதியை மேஜைமேல் வைத்தேன். நண்பர் முணுமுணுத்துக்கொண்டே எழுந்து போய்க் கதவைத் திறந்தார். உள்ளே நுழைந்தவர்களைப் பார்த்தோமோ, இல்லையோ இருவரும் ஏக காலத்தில் திடுக்கிட்டோம்.

அந்த ஓட்டலின் முதலாளியும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், கடுகடுப்பான முகபாவத்தோடு உள்ளே நுழைந்தனர், நாங்கள் எழுந்து நின்றோம்.

“இவர்கள்தான் சார்!” ― ஹோட்டல் முதலாளி இன்ஸ்பெக்டரிடம் எங்கள் இருவரையும் சுட்டிக்காட்டி இப்படிச் சொன்னார். எனக்கும் நண்பருக்கும் ஒன்றுமே