பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

ஆனால் அரைமணி நேரத்திலேயே அவசர அவசரமாகத் திரும்பி வந்துவிட்டார்கள் இவ்வளவுதான் எனக்குத் தெரியும்’ என்று சொல்வான். எனவே அவனுடைய சாட்சியத்தால் உங்களுக்கு நன்மை ஏற்படுவதற்குப் பதிலாகத் தீங்கே ஏற்படும்” என்றார் இன்ஸ்பெக்டர். அவர் பேசுவதைப் பார்த்தால் உண்மையில் எங்கள்மேல் அனுதாபப்படுவதுபோலவும், ஆனால் சட்டப்படி அந்த அனுதாபத்தைச் செயலளவில் காட்டமுடியாமல் வருந்துவது போலவும் தோன்றியது. நாங்கள் மேலே ஏதும் பேச வழியின்றி வாயடைத்துப் போய் நின்றோம்.

“இப்போது நான் இந்த அறையைக் கொஞ்சம் சோதனை போடலாமா?” இன்ஸ்பெக்டரின் தொனியில் அனுதாபம் மாறி அதிகாரம் வந்துவிட்டது. நாங்கள் தலையை அசைத்தோம்.

எடுத்த எடுப்பில் அவருடைய பார்வையில் பட்டது, மேஜைமேல் இருந்த கதையின் கையெழுத்துப் பிரதிதான்.அவர் அதைக் கையில் எடுத்துப் பொறுமையோடு கடைசி வரை படித்தார். பின்பு எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே பேசினார். “சார், நீங்கள் தப்புவதற்கே வழி இல்லை. பல வகையிலும் இந்தக் கொலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் நெருங்கிக் கொண்டே வருகிறது. இதோ இந்தக் கதையை நீங்கள் எப்படி எழுதினர்கள்?”

“அதை நான் எழுதவில்லை. இந்த நண்பர் எழுதியது. காலையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்போதுதான் கற்பனை செய்து எழுதினார்.” நான் இப்படிச் சொல்லிவிட்டு நண்பரைச் சுட்டிக் காட்டினேன்.

“கற்பனையா? கற்பனை! அஹ்ஹஹ்ஹா! யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்?” - இன்ஸ்பெக்டர் இடிச் சிரிப்புச் சிரித்தார்.

“ஏன் சார், அதில் சந்தேகம் என்ன? நிச்சயமாகக் கற்பனைதான்” என்று வற்புறுத்திக் கூறினார் நண்பர்.

“சார், சும்மா அளக்காதீர்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா? போலீஸ் இலாகாவில் இன்னும் அறிவாளிகள் இருக்கிறார்கள். எல்லோரும் முட்டாள்களாகிவிடவில்லை. நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.”

“இன்ஸ்பெக்டர் சார், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சற்றுத் தெளிவாகத்தான் சொல்லுங்களேன்? ”நான் கேட்டேன்.

“தெளிவாகச் சொல்வதற்கு என்ன ஐயா இருக்கிறது? கைப்புண்ணுக்குக் கண்ணாடியா வேண்டும்? இந்தக் கொலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லையென்றால் செத்தவர்களின் பெயர் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? அதுதான் போகட்டும் இறந்தவர்கள் காலடியில் பாறை இடுக்கினுள் கிடந்த ‘பாரம்பரியோவின் கதை’ என்ற புத்தகத்துக்கும் உங்கள் கதையில் வரும் சம்பாஷணைகளுக்கும் காப்பி அடித்தாற்போல அவ்வளவு சரியாக ஒற்றுமை இருக்கிறதே! அதற்கு என்ன சொல்கிறீர்கள்?”