பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


“என்ன ஐயா! வீட்டிலே சொல்லிவிட்டு வந்தியா? பார்த்துப் போ”அந்த டாக்ஸி டிரைவர் அவனை விசாரித்து விட்டுப் போனான்.

“கட்டுப்பாட்டை மீறித் தவறான பக்கத்தில் அதிக வேகத்தில் ஓட்டிக் கொண்டு வரும் இந்த மடையன் வீட்டில் சொல்லிவிட்டு வரவேண்டிய தில்லையாம். நான் வீட்டில் சொல்லிவிட்டு வரவேண்டுமாம்!” நாராயணன் சிரித்துக்கொண்டே நடைபாதையில் ஏறி நடந்தான்.

வலது கை தாங்காமல் ஃபைல் கட்டு, அரையில் அழுக்கேறிய நான்கு முழம் வேட்டி, மிதியடி இல்லாத கால்கள், இனிமேல் தைக்க இடமில்லை என்று கூறத்தக்க விதத்தில் அவ்வளவு தையல்களுக்கு ஆளாகிவிட்ட ஒரு கறுப்புக் கோட்டு; களையெடுக்காத பயிர் போல வாரப்படாமல் முன்நெற்றியில் வந்துவிழும் தலைமயிர் நரைத்தும் நரைக்காமலும் விகாரமாகத் தென்பட்டது.

ஆடம்பர வெள்ளம் நாகரிகக் குமிழியிட்டு ஓடும் அந்த மாபெரும் தெருவில் தன்னைப்போல ஒருவன் நடந்து செல்வதே அசிங்கமாக இருப்பதுபோல நாராயணன் மனத்தில் ஒரு பிரமை தட்டியது.

ஜவுளிக் கடைகள், பூக்கடைகள், காப்பி ஹோட்டல்கள், தெரு ஓரத்து ரிப்பன் வியாபாரிகள், பத்திரிகை விற்கும் பையன், ஒவ்வொன்றாக, ஒவ்வொருவராக, அவனைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். இல்லை, தவறு அவன்தான் அவைகளைக் கடந்து முன்னேறிக் கொண்டிருந்தான்.

ரேடியோ சங்கீதம், பஸ் கண்டக்டர்களின் விசில், பேச்சுக் குரல், வியாபாரிகளின் பேரம், தெருவெல்லாம் அமர்க்களமாகத்தான் இருந்தன, அந்த மாலை நேரத்தில்.

“மிஸ்டர் நாராயணன்!... சார் உங்களைத்தானே?”

யாரோ இரண்டு கைகளையும் தட்டிக் கூப்பிடும் ஓசை கூட்டம் நிறைந்த தெருவில் இப்படிக் கை தட்டிக் கூப்பிட்டால் அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பார்கள். இப்போதும் அப்படித்தான் நடந்தது.

நாராயணன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய பழைய நண்பன் அரட்டைக் கல்லி என்று பேர் எடுத்த ராகவன் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

“என்ன ராகவன்? செளக்கியமா?”

“செளக்கியத்துக்கு என்ன குறைவு?”

“எங்கே இப்படி? இந்தப் பக்கமாக...”

“சும்மாத்தான் வந்தேன்.”

“இப்போது எங்கேயாவது வேலை பார்க்கிறாயா? அல்லது சுதந்திரப் பிரஜைதானா?” இப்படிக் கேட்டுவிட்டு நாராயணன் சிரித்தான். ராகவனைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டவர்கள் மட்டும்தான் அந்தச் சிரிப்பைச் சிரிக்க முடியும்.