பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————————முதல் தொகுதி /நாணயம் ★ 169


“வேலையாவது ஒன்றாவது! எந்த முட்டாள் தரக் காத்துக் கொண்டிருக்கிறான் எனக்கு?”

“சரி! நான் வரட்டுமா? ஏகப்பட்ட ஃபைல்கள். இரவுக்குள் பார்த்து முடிக்க வேண்டும்.”

“நாராயணன்! ஒரு முக்கிய விஷயம்.”

“என்ன?”

“உன்னிடம் ஒரு இரண்டனா இருக்குமா? காப்பிக்கு வேண்டும்.” ராகவனுடைய குரல் தணிந்து தாழ்ந்து உலகத்திலுள்ள நைச்சிய மெல்லாம் ஒன்று சேர்ந்து வெளி வந்தது.

நாராயணனுக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. சிறிதுநேரம் பேசாமல் நின்றான். ஒரு புன்னகை பூத்தான். “ராகவன்! இன்றைக்குப் பர்ஸ் கொண்டு வர மறந்துவிட்டேன். வேண்டுமானால் வீட்டுக்கு வா, பார்க்கலாம்.” சாதுரியமாகப் புளுகியது அவன் வாய். வீட்டில் செப்பால் அடித்த சல்லிகடிடக் கிடையாதென்று அவன் மனத்துக்குத் தெரியாதா, என்ன?

“வேண்டாம், நான் இங்கேயே பார்த்துக் கொள்கிறேன். குட் பை, போய்விட்டு வா!”

அப்பாடா! நாராயணனுக்கு நிம்மதியாக மூச்சு வந்தது. ராகவனிடம் விடைபெற்றுக் கொண்டு நடந்தான்.

“சாமி! பூ வாங்கலியா... கொடை மல்லிகைச்சரம்...” பூக்காரிக்குப் பதில் சொல்லாமல் ஒதுங்கி நடந்தான்.

“எதை எடுத்தாலும் ஓரணா சார் எதை எடுத்தாலும் ஓரணா! ஒரே அணா!” ―நடைபாதையிலிருந்த கூட்டத்தை வகிர்ந்து கொண்டு மேலே நடந்தான் நாராயணன்.

வீட்டில் எத்தகைய வரவேற்பு காத்திருக்கும் என்பதை முன்கூட்டியே சிந்திக்கத் தொடங்கியது அவன் மனம்.

மனைவிக்கு ஜூரம். கஞ்சி போட்டுக் கொடுப்பதற்குப் பார்லி வாங்கி வருவேனென்று அவள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள். குழந்தை சுசி வாய்ப்பாடு புத்தகம் வேண்டுமென்று நான்கு நாட்களாக அரித்துக் கொண்டிருக்கிறாள். பெரிய பையனுக்குப் போன மாதம் பள்ளிக்கூடச் சம்பளம் கட்டவில்லை.நாளைதான் கடைசி நாள். வக்கீலிடம் பணம் வாங்கி வருவேன் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். வீட்டு வாடகைக்காரர், அந்த மனிதருக்கு மூன்று மாதம் பாக்கி, கழுகு போல் வந்து காத்துக்கொண்டிருப்பார்.அவர் ஏசும் ஏச்சுக்களை காது கொண்டு கேட்க இயலாது. பால்காரி அவள் உயிரையே வாங்கி விடுவாள்.

‘இப்படியே காலடியில் ஒரு பர்ஸ் வந்து விழுந்தால்? அதில் ஒரு நூறு ரூபாயும் இருந்தால்...’ ― கையாலாகாதவன் மனத்தில்தான் இந்த மாதிரி ஆசை உண்டாகிறது.