பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

‘நூறு ரூபாயாம் நூறு ரூபாய்! ―தரித்திரம் பிடித்த மனம் ஆயிரம், இலட்சம் என்று பெரிதாக நினையேன்!’ நாராயணன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

“கடவுள் அருளால் உனக்கு ஐயாயிரம் ரூபாய் கிடைத்துவிட்டதென்றால் என்ன செய்வாய்? என்று பிச்சைக்காரனிடம் ஒருவன் கேட்டானாம்.”

“தங்கத்தினால் ஒரு திருவோடுசெய்து மறுபடியும் பிச்சைக்குப்போவேன்!” என்று அந்த முட்டாள் பிச்சைக்காரன் பதில் சொன்னானாம்.

இது நாராயணனுக்கு நினைவு வந்தது. தரித்திரனின் மனம் பகற் கனவு கண்டால்கூட அதுவும் அற்பக் கனவாகவே இருக்கிறது. காலடியில் அகப்படுகிற பர்ஸில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அடிக்கவா செய்யும்?

பாழாய்ப் போன மனம் ‘நூறு’ என்று நினைக்கிறதே?

“எங்கே ஐயா? பராக்குப் பார்த்துக் கொண்டே போறே... மேலே இடிச்சுக்கிட்டு”

“ஸாரி மன்னிக்கணும்!”

நாராயணன் இனியும் யார் மேலாவது இடித்துவிடக் கூடாதே என்பதற்காகச் சுதாரிப்புடன் சென்றான்.

பால்காரன், வீட்டு வாடகைக்காரர் எல்லோரையும் ஒவ்வொருவராக சால்ஜாப்புக் கூறி அனுப்பியாகிவிட்டது. மளிகைக் கடைக்காரனைக் கெஞ்சிக் குழைந்ததின் பயனாகப் பார்லி அரிசி கடனாகக் கிடைத்தது. குழந்தை சுசியை ஒரு அதட்டுப் போட்டதில் பயந்து போய் வாய்ப்பாடு புஸ்தகம் கேட்பதையே விட்டுவிட்டாள். பெரிய பையன் விவரம் தெரிந்தவன். சந்தர்ப்பத்தைப் புரிந்து கொண்டு பேசாமல் இருந்துவிட்டான்.

நாராயணன் ஃபைல் கட்டைப் பிரித்தான்.இரவு எட்டேமுக்கால் மணி.அரிகேன் விளக்கின் மங்கிய ஒளியில் ஒவ்வொரு காகிதமாகப் புரண்டது.

பார்த்துக் கொண்டே வந்தவனுக்குத் திடீரென்று தன் கண்களை நம்பமுடியவில்லை. ஃபைல் காகிதங்களுக்கு நடுவே ஐந்தாறு புதிய நூறு ரூபாய் நோட்டுக்கள் மடித்துக் கிடந்தன. நாராயணனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஃபைல் முழுவதும் வரிசையாகப் பிரித்துப் பார்த்தான். நன்கு தேடியும் அவற்றில் வேறு நோட்டுக்கள் இல்லை.

அறுநூறு ரூபாய்! எவனோ கட்சிக்காரன் கொண்டு வந்து கொடுத்ததை இரும்புப் பெட்டியில் வைப்பதற்குப் பதிலாக மறந்து போய்ப் ஃபைலுக்குள் வைத்திருக்கிறார் வக்கீல்.

நாராயணன் மனத்தில் சபலம் தட்டியது. ஃபைலை மூடி வைத்துவிட்டுத் திரும்பத் திரும்ப நோட்டுக்களை எண்ணினான். ஆறு நூறு ரூபாய் நோட்டுகளை ஒரே சமயத்தில் கையில் வைத்துப் பார்த்தபோது திடீரென்று குபேரசம்பத்துக் கிட்டியது போலிருந்தது.