பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


‘சே! என்ன இருந்தாலும் திருட்டுத்தானே? திருடிய கை உருப்படுமா? இன்றைக்கு சிறு திருட்டு, நாளைக்குப் பெரிய திருட்டு.அப்புறம் கொள்ளை கொலை, சிறைவாசம் தூக்குத் தண்டனை’ - ஒரு மனம் இடித்துக் காட்டியது.

‘எவன்தான் திருடவில்லை? சமூகத்தில் ஒவ்வொருவனும் தான் திருடுகிறான். மனித சமூகத்தில் உடல் பலவீனத்தைக் காரணமாக வைத்து டாக்டர்கள் திருடுகிறார்கள். மனம் பலவீனத்தால் வக்கீல்கள் திருடுகிறார்கள். என்னைப் போல் ஒரு ஏழை உடம்பைச் செருப்பாக்கி உழைக்கிறவன் இதைத் திருடினால் என்ன?’ என்று மற்றோர் மனம் அவனுக்குத் துணிவு ஊட்டியது.

‘வயிற்றை நிரப்பும் நாணயம் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். பரம்பரை பரம்பரையாக ரத்தத்தில் ஊறி வந்த பண்பாடு தந்த இந்த நாணயம் இழந்தால் கிட்டுமா? ஆத்மாவையே ஈடாக வைத்தாலும் கிடைக்குமா? சேசே! இந்த வெறும் நாணயத்துக்காக அந்த நாணயத்தை இழக்கலாமா?’ அவன் குழம்பினான். அவன் மனத்தைப் போலவே வெளியே இடியும் மழையும் பிரளயமாடிக் கொண்டிருந்தது இயற்கை. குழந்தைகள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தன. நோயாளியான மனைவி ‘லொக்கு லொக்’கென்று இருமிக் கொண்டிருந்தாள். விளக்கின் மங்கலான ஒளியில் குழந்தை சுசியின் முகத்தைப் பார்த்தான் நாராயணன்.

தூக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள் குழந்தை ‘உலகத்திலுள்ள சத்தியத்தின் ஒளி எல்லாம் இங்கே இருக்கிறது’ என்று அந்த முகத்தில் எழுதி ஒட்டியிருப்பது போல் தோன்றியது.

“அப்பா திருடறதுன்னா என்னப்பா?”

“திருடினால் கண் அவிஞ்சிடுமா?” ― மழலை மாறாத குரல் இன்னும் நாராயணன் காதுகளை விட்டு நீங்கவில்லை. அவன் யோசித்தான் ― யோசனைக்குப் பின் வேகமாக எழுந்து வாயிற்கதவைத் திறந்தான்.

“இந்த இருட்டிலும் மழையிலும் நீங்கள் எங்கே கிளம்பிவிட்டீர்கள்?” என்று அவன் மனைவி வியப்புடன் கேட்டாள்.

“ஒன்றுமில்லை! இதோ வந்துவிடுகிறேன்? நீ தூங்கு!” என்று நாராயணன் தெருவில் இறங்கி மழையில் நனைந்து கொண்டே ஓடினான். மணிக்கூண்டில் பதினொன்று அடித்தது. மழை ஓசையில் அதன் ஓசை அடங்கி அமுங்கிப் போய்விட்டது.

“சார், சார் கதவைத் திறவுங்கள்!”

வக்கீல் வீட்டில் எல்லோரும் விளக்கை அணைத்துப் படுக்கைக்குச் சென்றுவிட்டனர்.

நாராயணன் கதவை மறுபடியும் தட்டினான்.“சார்! அவசரம்!”

கதவைத் தட்டும் ஓசை வீடு முழுவதும் எதிரொலித்தது. இப்படிப் பல முறை தட்டிய பிறகு வக்கீல் முணுமுணுத்துக் கொண்டே எழுந்து வந்தார்.