பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

ஓலக்குரல் எழுந்தது. யானை விழவில்லை. இருட்டில் யாரோ ஒரு பெண் வழி தெரியாமல் போய்க் குழி மேல் நடந்திருக்கிறாள். தட்டி முறிந்து உள்ளே குழிக்குள் விழுந்துவிட்டாள் போலிருக்கிறது. “யாரது?” மரத்தின் மேலிருந்து நான் இரைந்து கத்திய வினா ஆயிரம், பதினாயிரம் வினாக்களாக மாறி எதிரொலித்தது. பதில் இல்லை. குழிக்குள் இருந்து ஒரு பெண் அலறும் சப்தம் மட்டும் பரண் மேலிருந்து எனக்குத் தெளிவாகக் கேட்டது. எனக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. திகிலும் பரபரப்பும் ஏற்பட்டன. நான் கீழே இறங்கிப் பார்க்காவிட்டால் குழிக்குள் அக்கப்பட்டுக் கொண்டவள் அங்கேயே கதறிப் பயந்து உயிரை விட்டுவிடுவாளோ என்று திகைத்தேன். ஒரு கையில் டார்ச்லைட்டையும் இன்னொரு கையில் கயிற்றுச் சுருளையும் எடுத்துக் கொண்டு பரணிலிருந்து கீழ் நோக்கித் தொங்கும் கயிற்று ஏணி வழியே இறங்கினேன். மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள் குழம்பின. உடலில் சிறிது நடுக்கம் ஏற்பட்டது. அந்த இருளில் அம்மாதிரி மலைப்பகுதியில் கீழே நிற்பதனால் எந்த வினாடியிலும் அபாயம் ஏற்படலாம். மிருகங்கள் பழகுகிற இடம். ஆனால் அதற்காக ஒரு அப்பாவிப் பெண்ணைக் குழிக்குள்ளேயே தவிக்க விடுவதா? நான் வேகமாக நடந்து குழியருகே சென்றேன். வடக்கு ஓரமாகத் தட்டி முறிந்து இடைவெளி தெரிந்தது. கையிலிருந்த டார்ச்சை அமுக்கினேன். அப்பப்பா! அதை அமுக்குவதற்குள் கை நடுங்கிய நடுக்கம் சொல்லி முடியாது. விளக்கு ஒளி குழியின் இருண்ட பகுதியில் வட்டமாகப் படிந்தது.

நான் மங்கலான ஒளியில் அவளை ஓரிரு கணங்கள் உற்றுப் பார்த்தேன். கரிய நெடுங்கண்கள்; புருவங்கள்! அவை மன்மதன் வளைக்கின்ற வில்லோ எனத் தோன்றின. செம்பவள இதழ்! அழகிய நுனியுடன் கூடிய சிறிய நாசி! நெளி நெளியாகச் சுருளோடியிருந்த கருங்கூந்தலுக்கும் அந்த மதிமுகத்துக்கும்தான் எவ்வளவு பொருத்தம்? சந்திரனைக் கருநாகம் கவ்வினதுபோல், கொடியுடலுக்கு ஏற்ற ஒற்றை நாடியான தோற்றம். யானைக்காக வெட்டிய பள்ளத்தில் இப்படி ஒரு அழகியைப் பிடிக்கப்போகிறோம் என்று சொப்பனத்திலாவது எதிர்பார்க்க முடியுமா?

“ஐயோ! இந்தக் குழிக்குள் பயமாக இருக்கிறதே! என்னைக் காப்பாற்ற மாட்டீர்களா? நீங்கள் யாராயிருந்தாலும் சரி! உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகிறது”. அவள் மறுபடியும் ஓலமிட ஆரம்பித்துவிட்டாள். “சத்தம் போடாதே உன்னைக் காப்பாற்றத்தான் வந்திருக்கிறேன். இதோ இந்தக் கயிற்றை உள்ளே விடுகிறேன். இரண்டு கைகளாலும் கயிற்று துணியை இறுக்கிப் பிடித்துக் கொள்” என்று மேலிருந்து உரத்த குரலில் பதில் கூறிக் கொண்டே, கயிற்றுச் சுருளை அவிழ்த்துவிட்டேன். அவள் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டாள். எப்படியோ அவளை மேலே தூக்கிவிட்டேன். அப்போது பக்கத்தில் மரங்கள் முறிபடுகிற ஓசை கேட்டது. நான் திடுக்கிட்டேன். “பெண்ணே! நீ யாராக இருந்தாலும் சரி, இனி ஒரு விநாடிகூடத் தரையில் நின்றுகொண்டிருக்கக்கூடாது. யானைகள் மந்தை மந்தையாக வந்து போகிற இடம் இது. அதோ கேட்டாயா ஓசையை? உயிரின் மேல் ஆசையிருந்தால் வந்துதான் ஆக வேண்டும். வேறெங்கும் போக முடியாது” என்று