பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————————முதல் தொகுதி /நினைவில் நின்றவள் ★ 177

அவளை நோக்கிக் கூறிவிட்டுப் பரணில் ஏறுவதற்கு ஓடினேன். அவளும் என்னைப் பின்பற்றி ஓட்டமும் நடையுமாக வந்தாள். பழக்கத்தின் காரணமாகக் கயிற்று ஏணியில் வேகமாக ஏற முடிந்தது என்னால், அவள் எப்படி ஏறுவதென்று தெரியாமல் தயக்கமும் திகைப்பும் அடைவதைக் கண்டு, “ஆபத்துக்குப் பாபமில்லை! வேறு என்ன செய்வது? உன் வலது கையை இப்படிக் கொடு! நான் பிடித்து மேலே தூக்கி விடுகிறேன்” என்றேன். சொல்லும்போதே என் வார்த்தைகளை அவள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாதே என்ற பயத்துடன் நான் சொன்னேன். அவள் தயங்கி நின்றாள்.

“இப்படி நின்றால் நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான். என்னையும் மேலே போகவிடாமல் நீயும் வராமல் இப்படி ஊமையாக நின்றால் என்ன அர்த்தம்?” என்று கண்டிப்பான குரலில் அதட்டினேன். வெண்ணிறத் தந்தத்தில் கடைந்தெடுத்தது போன்ற அந்த வளைக்கை உயர்ந்தது.

அந்த இரவில் நான் ஒரு கனவைக் கண்டுகொண்டிருக்கிறேனோ என்று சந்தேகமாயிருந்தது. ஆனால் கனவல்ல, உண்மையில் ஒரு அழகிய பெண்ணின் கை; என் கையோடு பிணைந்த நிகழ்ச்சி மெய்யாகவே நடந்தது. பொய் இல்லை. கற்பனை இல்லை, புனைவும் இல்லை. அவள் குழியில் விழுந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடாத பயத்துடன் பரணில் என் முன் உட்கார்ந்திருந்தாள். கம்பளியைக் கொடுத்தேன். “இந்தா போர்த்திக்கொள், குளிர் அதிகமாக இருக்கும்” என்றேன். வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டாள். “யார் நீ? எதற்காக இங்கு வந்தாய்” என்று கேட்டேன்.

அவளுக்குச் சரியாகத் தமிழ் பேசத் தெரியாததால் மலையாளத்தில் தன்னைப் பற்றிக் கூறினாள். கூறும்போதே துயரம் தாங்காமல் நடுநடுவே விம்மி அழத் தொடங்கிவிட்டாள். முழுவதையும் கேட்டுமுடித்தபோது, அந்தப் பெண்ணின் சோகக் கதை என் உள்ளத்தை உருக்கியது. ‘இப்படியும் ஒரு துயரக் கதை வாழ்வில் புதைந்திருக்குமா?’ என்று ஏங்கினேன்.உடல் முழுவதும் செழித்து நிற்கும் இளமையும், இளமையை எடுத்துக்காட்டும் அற்புத அழகும் பொருந்திய அந்தப் பெண், கேவலம் நாள் ஒன்றுக்கு ஆறணாக் கூலிக்கு மரம் அறுக்கும் கோவிந்த ஈழவனின் மகளாக இருப்பாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. கோவிந்த ஈழவன் எங்கள் கம்பெனியின் மற்றோர் பிரிவாகிய மரக்கடையில் வேலை பார்ப்பவன். ரம்பம் பிடித்து மரம் அறுப்பது அவன் தொழில். சமீபத்தில் சில மாதங்களாக நல்ல மரங்கள் கிடைக்காததனால் எங்கள் கம்பெனியின் மானேஜர் நாலைந்து மரக்கடையை மூடிவிட்டார். கடையில் வேலை பர்த்து வந்தவர்களுக்குத் திடீரென்று வேலை போய்விட்டது. வேலையை இழந்தவர்களில் கோவிந்த ஈழவனும் ஒருவன். மனைவி குழந்தைகளோடு முக்கால் டஜனுக்கு மேல் பாரமுள்ள அவன் குடும்பம் பரிதவிப்புக்கு ஆளாகியது. வறுமைப் பிணி வாட்டி எடுத்தது. ஆணும் பெண்ணுமாக உழைத்தும் வீட்டில் அரை வயிற்றுப் பட்டினி. இப்போதோ ஈழவனுக்கு வேலையே போய்விட்டது. வேலையற்ற நிலையில் குடும்பம் தத்தளித்தது. மலேரியாக் காய்ச்சல் ஈழவனைப் படுத்த படுக்கையாக்கிவிட்டது. அவன் மனைவி ஏற்கனவே நோயாளி. பெண் மாதவி குழந்தைகளில் மூத்தவள். அவள் ஏதாவது செய்தால்தான்
நா.பா. I - 12