பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

வீட்டிலுள்ளவர்களின் வயிறு நிறையும். விவரம் தெரிந்த வயதுடைய மாதவி வீட்டுக் கொல்லையில் நேந்திர வாழை, மிளகு என்று ஏதோ பயிரிட்டிருந்தாள். அது ஒரு உப வருமானம்தான். தகப்பனாரே வேலையிழந்து வந்துவிட்ட போது, குடும்பத்தைத் தாங்கும் சக்தி முழுதும் அதற்கில்லை. ஒருநாள் இருநாள், கால் வயிறு நிறைந்தது. மூன்றாம் நாள் முழுப்பட்டினி.மாதவி என்ன செய்வதென்றே புரியாமல் திகைத்தாள்.

கூலிகளின் குடிசைகள் யானைகளைப் பிடிப்பதற்காகப் பரண் அமைந்திருந்த இடத்துக்கு அருகே ஒரு பெரியமேட்டில் இருந்தது.இரண்டு மூன்று நாட்களுக்கு முன் யானை பிடிப்பதற்காகப் பொய்க் குழி வெட்டி, அதன்மேல் கரும்புக் கழிகள், பெரிய கொப்பரைத் தேங்காய் மூடிகள் ― இவற்றையெல்லாம் பரப்புவதை மாதவி பார்த்திருந்தாள். ‘அந்தத் தடித்த கரும்புக் கழிகளில் ஒன்றாவது சாப்பிடுவதற்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என்ற ஏக்கம்கூட அவளுக்கு ஏற்பட்டது. குடிசை வாசலில் நின்றபடியே பரப்பியிருந்த கரும்பு, தேங்காய் மூடிகள் ஆகியவற்றையெல்லாம் வெகுநேரம் நாவில் நீர் ஊறப் பார்த்துக் கொண்டிருப்பது இரண்டொரு நாட்களாக அவள் வழக்கமாகிவிட்டது.

இரவு எட்டு மணிக்குமேல் பரணில் யானைக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களும் உறங்கிவிடுவார்களென்பது அவளுக்கு நன்றாகத் தெரியும், அன்றிரவு எப்படியும் அந்தக் கழிகளில் ஒரிரு கழிகளையும், தேங்காய்களில் சிலவற்றையும் எடுத்து, ருசிபார்த்துவிடுவதென்று தீர்மானித்துவிட்டாள் அவள். தாய், தகப்பன் குழந்தைகள் யாவரும் தூங்குகிற வரை அவள் தூங்காமல் காத்திருந்தாள். பசிக்கும், ஆசைக்கும் தூக்கம் ஏது? எட்டரை மணி சுமாருக்கு நெஞ்சில் துணிவை வரவழைத்துக் கொண்டு அடிமேல் அடி வைத்து நடந்தாள். பொய்ப் பள்ளம் இருந்த இடத்துக்கு அவசரமாக வந்தாள். வயிற்றில் பசியும், நாவில் நீருமாக, நடந்து வந்த அவளின் மிகுந்த ஆத்திரத்தினாலும், இருளில் தடம் தெரியாததனாலும் ஒரு பெருந்துன்பத்தில் தானாகவே அகப்பட்டுக் கொண்டுவிட்டாள்.

‘இவ்வளவு அழகான பெண்ணா வயிற்றின் பசிக்கும் நாவின் துறுதுறுப்புக்கும் அடிமைப்பட்டு இந்த வெட்கக் கேடான காரியத்தைச் செய்ய முன்வந்தாள்?’ என்று நினைத்து வியந்தேன். வானுலகிலிருந்து வழிதவறி வந்த மோகினிபோல் இருட்டில் என்னெதிரே பரண்மேல் உட்கார்ந்திருந்தாள் மாதவி.

“மாதவி வெறும் கரும்புக்கும் தேங்காய்க்கும் ஆசைப்பட்டா இதைச் செய்தாய்? என்ன அசட்டுத்தனம்? உயிருக்கு உலை வைக்கும் பிரதேசத்தில் இருட்டில் தனியே வரலாமா?” என்று கேட்டேன். என் கேள்விக்குப்பதில் இல்லை. விம்மி விம்மி அழும் ஒலி கேட்டது.

“அழாதே மாதவி! பரணில் நிறைய இடம் இருக்கிறது. அந்த மூலையில் நீ படுத்துக்கொள். விடிந்ததும் உன்னை வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன்” என்று கூறி அவளைத் தேற்றினேன். அவள் அப்போதே போக வேண்டும் என்றாள். நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். என் வார்த்தையை அவள் மீற முடியவில்லை. பரணின்