பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————————முதல் தொகுதி /நினைவில் நின்றவள் ★ 179

ஒரு மூலையில் அவளும் இன்னொரு மூலையில் நானுமாகப் படுத்துக் கொண்டோம். அந்த இரவு தூங்குவதுபோல் பாவித்து உண்மையில் தூங்க முடியாமலே இருவரையும் ஏமாற்றிவிட்டது. அது இரவின் குற்றமா? நெஞ்சின் குற்றம்தான்!

மறுநாள் பொழுது விடிந்ததும் மாதவியை அழைத்துக் கொண்டு கோவிந்த ஈழவனின் குடிசைக்குப் போனேன். குழியில் தடுமாறி விழுந்தபோது மாதவிக்கு ஏற்பட்டிருந்த காயங்களுக்கு மருந்து போடச் செய்தேன்.

வேலை கிடைக்கிறவரை செலவுக்கு வைத்துக்கொள்ளுமாறு கொஞ்சம் பணம் கொடுத்தேன். ஈழவனைத் தனியே அழைத்து, “கோவிந்தா! உன் மகளை நான் கலியாணம் செய்துகொள்ளப் போகிறேன், அதற்கு நீ சம்மதித்துத்தானாக வேண்டும்” என்றபோது அவனுக்கு நம்பிக்கையே இல்லை. நான் விளையாட்டுக்காகக் கேலி செய்கிறேனென்று நினைத்துக் கொண்டுவிட்டான். நான் மறுபடியும் வற்புறுத்திச் சொன்னபோதுதான் என்னை அவனால் நம்ப முடிந்தது. “அப்படியானால் அது என் பாக்கியம்தான்” என்று நாக்குழறி நடுங்கும் குரலில் கூறினான் அவன். என் மனம் குளிர்ந்தது.

அந்த அழகி இதழ் விளிம்பு அசைய ஒரு நாணப் புன்னகை புரிந்தாள். ‘அடுத்த வாரம் வைக்கத்தப்பன் கோவிலில் எங்கள் திருமணம் நடக்கும். அதன்பின் இந்தப் புன்னகைக்கும், இதன் பிறப்பிடமான செளந்தரிய உடலுக்கும் நான்தான் சொந்தக்காரன்’ என்று மகிழ்ச்சியால் துள்ளியது என் மனம். “ஐயா! உங்களாலே மூழ்கிக் கொண்டிருந்த என் குடும்பப் படகு சுகமாகக் கரையேறுகிறது!” என்று நன்றிப் பெருக்கோடு எனக்கு வந்தனம் செலுத்தினான் கோவிந்த ஈழவன்.

“ஈழவா! உன் மாதவிக்கு இருக்கிற அழகுக்கு அது மட்டுமா நடக்கும்? இதைவிடப் பெரிதாக நடந்தாலும் வியப்பில்லை” என்றேன். பிரம்மச்சாரிக் கட்டைக்கு அதிகம் செலவு ஏது? வாங்கின சம்பளத்தில் நானூறு, ஐநூறு மிச்சப்படுத்தி வைத்திருந்தேன். கோவிந்தனின் ஏழமையை உத்தேசித்துக் கல்யாணத்துக்கு முன் கொடுக்கும் பரிசப் பணம்போல் இருநூறு ரூபாயை அவனுக்குக் கொடுப்பது என்று தீர்மானித்திருந்தேன். அவன் அப்படி எதுவும் வேண்டுமென்று வாய் திறந்து கேட்கவில்லை. ஆனால் நானாகவே கொடுப்பதென்று முடிவு செய்துவிட்டேன். அதனால், “நாளை சாயங்காலம் கொஞ்சம் பணம் கொண்டு வந்து தருகிறேன். வாங்கி வைத்துக் கொள்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

நான் தங்கியிருந்த அறை பாதுகாப்புக் குறைவான இடம்.ஆகையால் சம்பளத்தில் மிச்சப்படுத்தியிருந்த பணத்தை எங்கள் கம்பெனி மானேஜரிடம் கொடுத்து வைத்திருந்தேன். பணம் வேண்டுமானால் இப்போது அவரிடம் போய்த்தான் கேட்க வேண்டும். ஆனால் சந்தர்ப்பம் அவரிடம் போக முடியாதபடி இருந்தது. பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு முன் மலேரியாக் காய்ச்சலில் அவருடைய மனைவி காலமாகிவிட்டாள். ஐம்பத்தேழு வயதில் நாலைந்து குழந்தைகளோடு தனியாக விடப்பட்ட அவர் ஒரே கவலையில் தத்தளித்துக் கொண்டிருந்தார். வீட்டிலிருந்து