பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

வெளிவருவதே இல்லை. துக்கமிகுதியினால் வேளா வேளைக்குச் சாப்பிடாமலும் தூங்காமலும் வீட்டிலே கிடக்கும் அவரிடம் இப்பொழுது போய்ப் பணம் கேட்பது பொருத்தமான காரியமில்லை என்று தயங்கினேன். கடைசியில் சக தொழிலாளி நாராயணன் நம்பியார் இருநூறு ரூபாய் கொடுத்தான். என் கவலையும் பிரச்னையும் தீர்ந்தன. மறுநாள் மாலை பணத்தோடு ஈழவனைப் பார்க்கச் சென்றேன்.

“இந்தா பணம்! ஈழவா… வருகிற ஞாயிற்றுக்கிழமை வைக்கத்தப்பன் கோவிலில் கல்யாணம். வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் நானே செய்துவிடுகிறேன். வாங்கிக்கொள் இதை…”

என் பணத்தை ஈழவன் வாங்கிக் கொள்ளவில்லை. அவன் முகத்தில் மலர்ச்சியைக் காணோம். நான் திகைத்தேன். “ஏன், பணம் வேண்டாமா உனக்கு?”

“அது இல்லை! வந்து…”

“இல்லாவிட்டால், பின் என்ன?”

“மத்தியானம் நம்ம மானேஜர் சார் இங்கே வந்திருந்தார்.”

“மானேஜரா? அவர் எதற்காக இங்கே வர வேண்டும்? என்ன காரியமாக அவர் வந்திருந்தார்?”

“அவர் வந்திருந்தபோது இங்கே குடிசை வாசலில் மாதவி புடவை தோய்த்துக் கொண்டிருந்தது?”

“ஊம்ம்! அப்புறம்?”

“‘இது யார்?’ என்று கேட்டார். ‘என் மூத்த பெண் மாதவி’ என்றேன். கலியாணம் கட்டிக் கொடுத்திட்டியா, இல்லையா என்று கேட்டார்…”

“ஊம்ம்!”

“‘இல்லை! இனிமேல்தான் கட்டிக் கொடுக்கணும்’ என்றேன். அவர் கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். திடீரென்று, ‘நானே கட்டிக்கிறேன், கொடுப்பியா?’ என்றார். நான் அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தயங்கிக் கொண்டிருந்தபோது, ‘கோவிந்தா! எனக்கு இவளை மிகவும் பிடித்திருக்கிறது. இந்தா! இந்தப் பணத்தை வைத்துக் கொள்’ என்று ஐநூறு ரூபாயை என் கையில் திணித்துவிட்டார். நான் பதில் பேசவே முடியலீங்க. ‘சும்மா தயங்காதே! கலியாணமானதும் நீதான் மரக்கடையில் மேஸ்திரி வர வெள்ளிக்கிழமை குருவாயூரில் கல்யாணம் எல்லா ஏற்பாடும் நான் செய்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.”

பூமி, வானம், திசை, திருக்கோணம் எல்லாம் இடிந்து என் தலைமேல் விழுந்து அமுக்குவது போலிருந்தது எனக்கு ஈழவன் என் முன்தான் நின்றுகொண்டிருந்தான். அவனை நான் என்ன செய்ய முடியும்? அவன் என்னைவிட ஏழை. நானோ மானேஜரைவிட ஏழை ஈழவனின் குடிசை வாசலில், நான் முதல்நாள்