பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————————முதல் தொகுதி /நினைவில் நின்றவள் ★ 181

கொடுத்துவிட்டுப் போயிருந்த கரும்பின் சுவைத்துத் துப்பிய சக்கைகள் சிதறிக் கிடந்தன. அவை என்னைப் பார்த்துச் சிரித்தனவா? அல்லது விதி உன் ஆசையையும் இப்படித்தான் கடித்துத் துப்பிவிட்டது என்று கூறாமல் கூறினவா?

பணமுள்ளவர்களுக்கு ஆசையையும், ஏழைகளுக்கு அழகையும் படைத்த பிரம்மாவின் முகத்தில் கரியைப் பூசத் துடித்தன என் கைகள். ஆனால் முடிகிற காரியமா அது? அன்று குழியிலிருந்து ஒருத்தியைக் காப்பாற்றினேன். இன்று நானே குழியில் விழுந்துவிட்டேன்.

என் அருமை உள்ளமே! இதுதான் அந்தக் கதை. எண்ணமும் நானும் ஓயாமல் எவளைப் பற்றி எண்ணுகிறோமோ, அவள் இப்போது ஒரு கம்பெனியின் மானேஜருக்கு மனைவி! ஆனால் நினைவளவில் பார்க்கும்போது அவள், அந்த மகாசெளந்தர்யவதி இன்னும், இப்போதும், இந்த விநாடி வரை எனது நினைவில் நிலையாக இடம் பெற்றுவிட்டாள். காலம் பதினைந்து வருஷ மலர்களை உதிர்த்துவிட்டது.

என் நினைவை மட்டும் யாராலும் உதிர்க்க முடியவில்லை. காலம் மட்டும் என்ன? காலத்தை ஆட்டி வைக்கும் மூலத்துக்கு மூலமான விதி நினைத்தாலும் என் நினைவை அழிக்க முடியாது! என் நினைவு? அது என்னுடன்தான் அழிய வேண்டும்!

(கல்கி, 13.10.1957)