பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24. உறியடி

ன்னிய நத்தம் ஆதி நாராயணப் பெருமாள் கோவில் வாசலில் எள் போட்டால் எள் விழ இடமில்லை. அவ்வளவு கூட்டம், வாணவேடிக்கைகள் என்ன, பொய்க்கால் குதிரை விளையாட்டென்ன, சதிர்க் கச்சேரிகளென்ன, சங்கீதக் கச்சேரிகளென்ன, ஊர் திருவிழாப் பட்ட பாடு பட்டுக் கொண்டிருந்தது. ஆதி நாராயணப் பெருமாளின் உறியடித் திருவிழா என்றால் அக்கம் பக்கம் இருபது கல் சுற்றளவிலுள்ள எல்லாச் சிற்றூர்களுக்கும் பிரசித்தமான விஷயம் அது.

ஆவணி மாதம் கண்ணன் பிறப்புக்கு மறுநாள் ஆண்டு தோறும் உறியடித் திருநாள் நடப்பது வழக்கம். அன்று இரவு எட்டு, எட்டரை மணிக்குப் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். பெருமாள் கோயிலைச் சுற்றி பிரகார வழியே புறப்பட்டு உறியடிக்காகத் தயிர்ச் சட்டிகளைக் கட்டித் தொங்க விட்டிருக்கும் மரத்துக்கு எதிரே வந்ததும் உறியடி நடை பெறும். உறியடிக்காகவே பரம்பரையாகக் கோயில் மானியம் பெற்று வரும் கரையாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமியை வணங்கி விட்டு அர்ச்சகர்கள் செய்யும் வழக்கமான மாலை, பரிவட்ட மரியாதைகளுக்குப் பின் உறிச் சட்டிகளை அடிக்க ஆரம்பிப்பார்கள். சட்டிகளை அடிப்பதற்காக எட்டு ஒன்பதடி உயரமுள்ள கருங்காலி மரக்கழிகளை வைத்துக் கொள்வதுண்டு.

உறியடி நிகழ்ச்சி பார்ப்பதற்கு மிகவும் ரஸமான காட்சியாக விளங்கும். ஒன்பது சிறு மண் கலயங்களில் பசுவின் தயிரை நிரப்பி ஒரு மூங்கில் சட்டத்தில் வரிசையாகக் கட்டித் தரையில் ஊன்றிய இரண்டு மரங்களுக்கு நடுவே தொங்க விட்டு விடுவார்கள். உறிக் கலயங்கள் தொங்கும் சட்டத்தின் நடுவே ஒரு கயிற்றைக் கட்டி அதன் நுனியைப் பிடித்துக் கொண்டு பின்புறம் ஒருவன் நிற்பான். அருகே, மஞ்சளும் சுண்ணாம்பும் கரைத்த தண்ணீரைப் பீச்சாங்குழலில் அடைத்துக் கொண்டு மற்றோர் ஆள் நிற்பான். உறியை அடிக்கும் கரையாளன் பத்து கெஜ தூரத்துக்கு முன்னாலிருந்தே ஓடி வந்து தரையிலிருந்து எழும்பிக் குதித்துக் கம்பை ஓங்கி அடிப்பதற்கு முயல்வான். சரியாக அதே நேரத்தில் பின்புறம் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருப்பவன் உறிச் சட்டத்தை விறுவிறுவென்று மேலே தூக்கி விடுவான். பீச்சாங்குழல்காரன் சுண்ணாம்பு நீரைச் ‘சர்ர்’ரென்று கரையாளனின் முகத்தைக் குறி வைத்துப் பீய்ச்சுவான். கயிறு இழுக்கப்பட்டதால், உறிச் சட்டம் ஓங்கிய கம்பின் குறியை மீறிக் கொண்டு மேலே உயர்ந்து விடும்.அதே சமயம் பாய்ச்சப்பட்ட சுண்ணாம்பு நீர் முகத்திலும் கண்களிலும் வழிந்து கண் பார்வையை மறைக்கும். கரையாளன் ஏமாறுவான். அப்போதெல்லாம் கூட்டத்தில் அலையலையாகச் சிரிப்பொலிகள் கிளம்பும். இவ்வளவு இடையூறுகளையும் பொறுத்துக் கொண்டு எந்தக் கரையாளன் சீக்கிரமாக ஒன்பது மண்