பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



“எல்லாம் இந்த உறியடியாலே வந்த வினைதான். அன்றைக்குச் செய்த சத்தியம்தான் ஆள் இதுவரை வேறு பெண் முகத்தைக்கூட ஏறிட்டுப்பார்த்ததில்லை” - திருவடியாபிள்ளை பெருமூச்சுவிட்டார்.

மழைக்காற்று அடித்தால் அருகே எங்கோமழை பெய்து கொண்டிருக்கிறதென்று அனுமானிக்க முடிவதுபோல் திருவடியாபிள்ளை ஒரு விஷயத்தைப் பெருமூச்சு விட்டுக் கொண்டே கூறினார் என்றால் அதற்குள் ஒரு கதை பதுங்கிக் கிடக்கிறதென்று நான் கண்டு கொள்வேன்.

“விவரமாக எல்லாவற்றையும் சொல்லுங்கள்? நான் பிள்ளையவர்களைத் தூண்டித் துருவிக் கேட்டேன். இடது கன்னத்தைப் பந்துபோல உப்பச் செய்திருந்த புகையிலைச் சாற்றைக் கீழே இறங்கித் துப்பிவிட்டுத் திரும்பவும் பிள்ளை சொல்லத் தொடங்கினார்.

அந்தக் கதை :

சேது ராமலிங்கத்திற்கு அப்பொழுது இருபத்தைந்து வயது. வாலிபப் பருவத்திற்கேற்றாற் போல் ‘நிகுநிகு’ வென்று வளர்ந்திருந்தான். கருகருவென்று வளர்ந்திருந்த கட்டுக் குடுமியை அள்ளி முடிந்து கொண்டு சிவந்த நெற்றியில் கால் துட்டு அகலத்துக்கு விளங்கும் குங்குமப் பொட்டோடு தெருவில் இறங்கி நடந்து வந்தானானால் காமன் பண்டிகையில் மன்மத வேடம் போடும் இளம்பருவத்து ராஜபார்ட்காரனைப் போல இருக்கும். பூசணிக் கொடியில் நுனிப்பகுதி சுருண்டு மினுமினுப்பதுபோல் காதோரங்களில் குடுமியிலிருந்து பிரிந்த கேசச் சுருள் வளைந்து வளைந்து காட்சியளிப்பது, அவனுடைய முகத்தின் அழகிற்குத் தனிக் களையைக் கொடுக்கும்.

அவன் நிறம் குங்குமச் சிவப்பு. அவனுடைய அழகிய புஜங்களைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமானால் ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்று கம்பர் சொல்லுவதைத்தான் சொல்ல வேண்டும்.அவ்வளவு கவர்ச்சிகரமான புஜங்கள் அவை. அளந்து அளந்து படைத்ததுபோல் வனப்பு நிறைந்த அங்கங்களைக் கொண்ட கட்டுமஸ்தான சரீரம் அவனுக்கு. சதா சிரிப்பு கொஞ்சும் அவனுடைய மலர்முகத்தை இன்று முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கலாம். தாமரை இதழ்களைப்போல அகன்ற பிரகாசமான அவன் விழிகளில் தனிப்பட்ட ஒரு கவர்ச்சி தளும்பும்.

இப்படிப்பட்ட அழகான பிள்ளை தன்னுடைய கலியான விஷயமாகத் தகப்பனுடன் முரட்டுத்தனமாகச் சண்டை போட்டுக் கொண்டான் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

சேதுராமலிங்கம் சிறுவயதிலேயே தாயை இழந்தவன். அவனுடைய தகப்பனார் சண்முகவடிவேலுக் கரையாளர் தான் அவனை வளர்த்துப் பெரியவனாக்கி விட்டிருந்தார். தகப்பனாரிடம் அளவற்ற மரியாதையும் விசுவாசமும் உள்ளவனாயிருந்தும் கலியான விஷயமாக அவர் பார்த்திருந்த பெண் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு எந்தப் பெண்ணை மிகவும் பிடித்திருந்ததோ அந்தப்